பி பி ஸி தமிழோசை….ஓய்ந்தது

TSV Hari's memories of working with BBC Tamilosai in London, a day after the 76 year old short wave shut operations.

0
325
76 வருடங்கள் பழமையான பிபிசி தமிழோசை சிற்றலை ஒலிபரப்பு நிறைவுற்றது

புஷ் ஹவுஸ் என்ற பி பி ஸியின் லண்டனின் மையப் பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்தின் ஐந்தாம் மாடியில் – லிஃப்டிலிருந்து இறங்கி, இடது புறம் திரும்பிய உடன், இடது புறமுள்ள ஒரு அறை காலியாகி விட்டது. ஏன் எனில், அங்கிருந்து தயாராகி வந்த தமிழோசையின் ஒலி ஏப்ரல் 30 முதல் ஓய்ந்து விட்டது.

கிங்ஸ் வே [ராஜப் பாதை?] என்ற விரிந்த சாலையின் இறுதியில் – இந்தியத் தூதரகத்தின் மிக அருகில் அடுத்த தெருவோரத்தில் தேம்ஸ் நதிக்கரை, தடுக்கி விழுந்தால் பிரசித்தி பெற்ற சாரிங் க்ராஸ் தெருவோடு இணைந்துள்ள இங்கிலாந்து தலைநகரில் இன்று கொடிகட்டிப் பறக்கும் நாடக மேடைகள் உள்ள பகுதி, அதன் அருகில் ஃப்ளீட் ஸ்ட்ரீட் என்ற பத்திரிகைகள் அலுவலகங்கள் உள்ள உலகப் புகழ் வாய்ந்த தெரு … இப்படி பி பி ஸி தமிழோசையின் அருகாமையிலுள்ள இடங்களை வாய் நிறைய வர்ணிக்கலாம்.

இதையும் பாருங்கள்: நந்தினி

இதையும் படியுங்கள்: தண்ணீர்…தண்ணீர்: அழிவின் விரைவுச் சாலையில் தமிழ்நாடு

80கள் முதல் 90கள்வரை அந்த அலுவலகத்திலிருந்தும், அந்த அலுவலகம் மூலமாக இந்தியாவிலிருந்தும் தமிழோசை வாயிலாகச் செய்திகளை அளித்த எனக்கு, அந்தக் குரல் ஓய்ந்த செய்தி கொஞ்சம் வருத்தத்தைத் தருகிறது.

முதன்முதலில் அந்தக் கட்டடத்தினுள் நுழைந்த என்னை நானே, அன்றைய தமிழோசையின் “தலைவர்” அமரர் சங்கரன் சங்கரமூர்த்தியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

“சங்கர் அண்ணா” என்று அறியப்பட்ட அவர், நல்ல பத்திரிகையாளர், சிந்தனையாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் … இப்படிப் பல கிரீடங்களை ஒரே நேரத்தில் அணிந்து அசத்தியவர்.

“ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையைத் தருகிறேன். தமிழாக்கம் செய்யவும். மொழிபெயர்த்து – தமிழைப் படுத்தக் கூடாது,” என்றார் சிரித்துக்கொண்டே!

எனக்களிக்கப்பட்ட செய்தி – அர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்கும் இடையே உள்ள நகோர்னோ கராபாக் பகுதிக்கான சச்சரவு தொடர்பான செய்தி.

இதன் தமிழாக்கம் எனக்கு ஒரு நல்ல பெயரைப் பெற்றுத் தர வைக்க முயலுவேன், என நானே ஒரு முடிவெடுத்தேன். தமிழில் எழுதிய எனது கட்டுரையைப் படிக்க சங்கரிடம் விண்ணப்பித்தேன்.

“நேரா, லைவா படியுங்க! நீங்க என்ன கெட்ட வார்த்தையா எழுதி இருக்கப்போறீங்க? இல்ல அப்படி எதையாவதைச் சொல்லவா போறீங்க?”

அவரது கேள்வி தமாஷாக இருந்தாலும், எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

அன்று அவர் மட்டுமே ட்யூட்டியில் இருந்தார். அவருடன் என்றுமே ஒலிபரப்பி இராத நான்.

இந்திய நேரப்படி இரவு 9-15க்குத் துவங்கும் ஒலிபரப்பு சரியாக அரை மணி நேரம் “ஓடும்.”

வழக்கம்போல அவரது ஒரு ‘இன்ட்ரோ’.

செய்தித் தொகுப்பைப் படிக்கத் துவங்கினார்.

அவர் அணிந்திருந்த சோடாபுட்டிக் கண்ணாடி மூக்கின் மீதிருந்து நழுவிக் கீழே விழுந்தது. இரண்டு வினாடிகள் ஸரஸ்வதி தேவியை வேண்டிக்கொண்டு, லைவாக செய்திகளை, ஒரு சின்னப் பிசிறுகூட இல்லாமல் அவர் “ஒப்பித்தார்”. அடுத்தபடியாக, முன்பு பதிவாகி இருந்த டேப் ஒன்றை ஓட்ட – இஞ்சினியருக்குச் சைகை செய்தார். அவரது ஒலியே மீண்டு ஒலிக்கத் துவங்கியது. குனிந்து கண்ணாடியை எடுத்தார். கார்பெட் [கம்பளம்] விரிக்கப்பட்டிருந்த தரை. “நல்ல வேளை கண்ணாடி உடையவில்லை,” என்று கூறி எதுவுமே நடவாத மாதிரி அதை எடுத்து அணிந்துகொண்டு … “இதை எல்லாம் பார்த்து டென்ஷன் ஆகவேண்டாம். தைரியமாப் படியுங்க,” என்றார் என்னிடம்.

சென்னையின் வடக்கில், பாரிமுனை அருகே அமைந்துள்ள ஒரு தேவாலயம் அர்மேனியன் சர்ச் என்றும், அது உயர்ந்து நிற்கும் தெருவை அர்மேனியன் ஸ்ட்ரீட் என்றும் சொல்வார்கள், சொல்கிறார்கள். ஆனால், தமிழர்கள், அதை அரண்மனைக்காரன் தெரு என்று அன்றும் சரி, இன்றும் சரி, சொன்னார்கள், சொல்கிறார்கள்.

“இதை அரண்மனை விவகாரம் எனலாம். சென்னையின் வடக்குப்பகுதியிலுள்ள தெருவின் பெயரை நினைவுபடுத்தும் நாடு அர்மேனியா. அதற்குச் சொந்தமான இடம் என்று நகோர்னோ கராபாக் என்ற பகுதி….” என்று ரேடியோவில் எனது கன்னி ஒலிபரப்பை சில நிமிடங்கள் கழித்துத் துவங்கினேன்.

இதையும் படியுங்கள்: இப்போது செய்திப்புறா: உங்கள் கைகளில் ஊடகம்

இதையும் படியுங்கள்: இவர்கள் நீதி தேவதையையே என்கவுன்டர் செய்து விடுவார்கள்

அன்றைய நிகழ்வு முடிந்து மாலையில் கட்டடத்தின் பேஸ்மென்டிலுள்ள க்ளப்பில் எனக்கு சங்கர் “ஸ்காச்’ விருந்து வைத்து, “இன்றை ப்ராட்காஸ்டுல என்னைக் காணாம பண்ணிட்டீங்க. இன்றைய ஒலிபரப்புக்கான லெட்டர்கள் அனைத்துமே உங்களப் புகழ்ந்துதான் வரும்! சென்னை அமாவாசை என்றால் அர்மேனியா அப்துல் காதர்! இரண்டுக்கும் அபாரமா முடிச்சுப்போட்டதுக்காகத் தான் உமக்கு ஸ்காச்,” என்றார்.

எனது பி பி ஸி உடனான உறவு தமிழோசையில் துவங்கியது. அதுவே விரிவடைந்து, ஹிந்தி, ஆங்கிலம், உர்து ஆகிய மொழிகளில் விரிவாக்கம் பெற்றது. சில நாட்களில், தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், உர்து ஆகிய நான்கு மொழிகளிலும் ஒலிபரப்பி, அக்காலத்தில் பி பி ஸி யின் தெற்காசிய மொழி ஒலிபரப்புகளின் தலைவரான கைலாஷ் புத்வாரின் காரியதரிசி சினேட் என்ற ஐரிஷ் பெண்ணைக் குழப்பத்தில் ஆழ்த்திய நினைவு உண்டு.

“உங்க ஒலிபரப்புக் காகிதங்களை எங்கே வைக்கறது? இந்தியன் ஸெக்ஷன்லயா, இல்ல…பாகிஸ்தான் ஸெக்ஷன்லியா?”

“1947லயே … நீ பொறக்கறதுக்கு முன்னாடியே இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைச்சிரிச்சி. பாகிஸ்தானைவிட உருது பேசறவங்க இந்தியாவுல அதிகம்னு உன்னோட மூளைன்ற தகவல் கிடங்குல மேட்டரை ஏத்து,” என்றேன், சிரித்துக்கொண்டே. இதை சங்கரிடமும், அக்காலத்தில் பி பி ஸியில் பணிபுரிந்த ஸ்வாமிநாதனிடமும் கூறிய போது ‘கொல்லென்று” சிரித்தார்கள்.

ஷேக்ஸ்பியரின் நான்கு நாடகங்கள், பெர்னார்டு ஷாவின் பிக்மாலியன் [Pygmalion], கிரேக்கக் கவிஞர் ஹோமரின் இல்லியாட், வ்யாசர் பெருமானின் பகவத் கீதை ஆகியவற்றை தமிழாக்கம் செய்த நல்லவர் ஷங்கர். 1966இல் தமிழோசை வாரம் இரண்டு முறை என்று துவங்கியது. அதைத் தினசரி நிகழ்வு ஆக்கி – சுமார் இரண்டு மாமாங்கங்கள் தனி ஒருவராகவே நடத்திச் சாதனை புரிந்தவர் சங்கர்.

தமிழோசை நிகழ்வுகளின்போது, பல அதிர்ச்சி தரும் நிகழ்வுகளைக் கண்டிருக்கிறேன். அதில் ஒன்று – “விடுதலைப் புலிகளின்” தலைவர்களுள் ஒருவரான கிட்டு பி பி ஸி அலுவலகம் வந்தது. அவருக்கு ராஜ மரியாதை செய்தவர், அப்போது அங்கு பணிபுரிந்த ஆனந்தி சூரியப்பிரகாசம்.

“பிக்மாலியன் நாடகத்தைத் தழுவி துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் மனம் ஒரு குரங்கு என்ற நாடகத்தை எழுதி, மேடை ஏற்றி, அதைப் படமாக்கி வெற்றி கண்டார். ஆனால் அதன் நிறைவுக் காட்சி துன்பகரமாக முடிந்தது. ஒரிஜினலாக ஷா எழுதிய நாடகத்தின் க்ளைமாக்ஸ் அப்படி இருக்கவில்லை. இது மாதிரியான சில விஷயங்களை வெளிக் கொணருவதற்காகவே அந்த நாடகத்தை தமிழாக்கம் செய்துள்ளேன். இதில் நடிக்க தமிழ்த் திரை உலக நட்சத்திரம் யாரேனும் கிடைத்தால் நன்றாக இருக்கும். பெஸ்ட் சாய்ஸ் ராதிகா. அடுத்தபடியாக … ரேவதி,” என்றார்.

அடுத்த வாரம் இந்தியா வந்த நான், ராதிகாவைச் சந்தித்து, அவரை ஷங்கரைத் தொடர்பு கொள்ளும்படிச் சொன்னேன்.

பின்னர் லண்டன் சென்றபோதும் சரி, நாடகம் ஒலிபரப்பானபோதும் சரி, அதன் பின்னரும் சரி … ராதிகாவிடமிருந்து “நன்றி” என்ற மூன்று எழுத்துள்ள தமிழ் வார்த்தை வரவில்லை.

சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் அலுவலகத்தில் அவரையும் சரத்குமாரையும் சந்திக்க நேர்ந்தபோது, ராதிகாவிடம் அச்சம்பவத்தை ஞாபகப்படுத்தினேன்.

“ஐ ஆம் ஸோ ஸாரி, ஹரி,” என்று கூறிச் சென்றுவிட்டார். இம்முறையும், “நன்றி” வரவில்லை!

அது நன்றல்லாத விஷயம், ஆனால் அதை அன்றே மறக்க, நான் திருவள்ளுவன் அல்ல!

ஒலிபரப்பும் விஷயத்தில் சங்கர்தான் குரு.

இதையும் பாருங்கள்: ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பது எப்படி?

இதையும் பாருங்கள்: பிராடா கேன்டியும் ஆப்பிள் போனும்: நீங்கள் பார்க்காத அமெரிக்கா

2012இல், தனது 81-ஆவது வயதில், லண்டனின் வட பகுதியான வெம்ப்ளியில் இறைவனடி சேர்ந்தார் அவர். ஷங்கரும் நானும் வெம்ப்ளியில் கால்பந்துப் போட்டிகளை ஒன்றாகக் கண்டு ரசித்திருக்கிறோம். அந்த அரங்கு அருகே உள்ள பல “பப்”[Pub]களுக்குத் தமிழில் பெயர் வைத்து மகிழ்ந்திருக்கிறோம். அதில் இரண்டு நினைவிலுள்ளன: “முனியம்மா ட்ரிங்கு டொக்கு;” “மங்கம்மா சாராய சத்திரம்”.

பி பி ஸியில் ராஜீவ் கொலையை ஹிந்தி சேவை மூலமாக “ப்ரேக்கிங் செய்தி” ஆக்கியது நான் …அன்று அதை காலம் சென்ற காவல் துறை அதிகாரி ஸ்ரீபால்தான் ஊர்ஜிதப்படுத்தினார். அது பற்றிய செய்திகளை தமிழோசையில் பல முறை ஒலிபரப்பினேன். உலகளாவிய “ஸ்கூப்” ஆக, ராஜீவைக் கொலை செய்தது ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண் என பேராசிரியரும் தடயவியல் நிபுணரும் ஆன சந்திரசேகரன் கூறியதை முதன்முதலில் தமிழோசையில்தான் செய்தி ஆக்கினேன்.

எனக்குப் பின்னர் பலர் அங்கு பணி புரிந்தனர். நண்பர் டி என் கோபாலன் அதில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்.

ஒரு முறை தி மு க அலுவலகத்தில் ஒரு நிகழ்வை முடித்து, அர்ஜென்டாக லண்டனுக்குச் செய்தி அனுப்ப வேண்டி இருந்தது.

வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து ஃபோனைப் போட்டு அப்பணி இனிதே முடிய ஒரு சிறு உதவி செய்தேன்.

“உனக்கு ரொம்ப தாராள மனசுடா மாப்ளே! இதை எல்லாம் எவனும் செய்ய மாட்டான்,” என்றார் கோபாலன்.

இனி இது போன்ற மலரும் நினைவுகள் மட்டுமேதான் எஞ்சி இருக்கும்.

தமிழோசையின் குரல் ரேடியோவில் ஓய்ந்துவிட்டது. அது டிஜிட்டலில் கம்பீரமாகத் தொடரும், என்கிறார்கள். தொடர்ந்தாலும் தொடராவிட்டாலும், ரேடியோவில் அதன் குரல்வளை நெரிக்கப்பட்ட விஷயம் மனதை என்னவோ செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை, மறைப்பதற்கில்லை, மறப்பதற்கில்லை…

இதையும் படியுங்கள்: வரலட்சுமி சரத் குமார் சொன்னது என்ன?: வீரமான பெண் பதிவின் முழு விவரம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்