ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை அடையாளம் காண்பதில் ஏற்பட்டுள்ள பின்னடைவால் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கும் முடிவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு.

பிரதமர் மோடியின் அறிப்பின் படி இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை 2022-ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதை இலக்காக கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பிளாஸ்டிக் அல்லாத மாற்றுப் பொருட்களுக்கு மாறிக்கொள்ளவும் பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏற்கனவே ஒரு முறை பயன்படுத்தும் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ள போதும், அதனை உறுதியாக செயல்படுத்துவதில் முனைப்பற்ற நிலை நிலை நிலவுவதால் சிறு வியாபாரிகள் உள்ளிட்டோர் பயன்படுத்தி வருவதை இன்னும் தடுக்க முடியவில்லை

இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்து அவற்றுக்கான மாற்றுப் பொருட்களை கண்டுபிடிப்பதில் அடுத்த இரு ஆண்டுகள் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தித்துறையில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றும் நிலையில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அவர்களுக்கான மறு வாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்வதும் அவசியமாகியுள்ளது.

பிளாஸ்டிக் பைகள் பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், ஸ்ட்ரா உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அவற்றுக்கான மாற்றுப் பொருட்களை கண்டறிந்து உற்பத்தி செய்ய தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் துறை கடந்த மாதம் வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் படி பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை தடை செய்ய மாநில அரசுகள் சட்டபூர்வ நடைமுறைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெரிய நகரங்களில் நாள்தோறும் 4 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளும் ஆண்டு தோறும் 94 லட்சத்து 60 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளும் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவற்றில் 40 சதவீதம் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என்றும் ஐ.நாவின் தன்னார்வ சூற்றுச்சூழல் செயல் திட்ட அமைப்பான பிளாஸ்டிக் இல்லா கூட்டமைப்பு, இந்திய தொழில் துறைக் கூட்டமைப்பு, உலக வனவிலங்கு நிதியம் ஆகியவற்றின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே 18 மாநிலங்களில் எவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன என்ற புள்ளி விவரம் இல்லை என மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 மாநிலங்களில் பிளாஸ்டிக் பிரச்சினையை எதிர்கொள்ள மாற்று நடவடிக்கை தொடர்பான எந்தத் தகவலும் இல்லை என்றும் பல மாநிலங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து பிரித்து மேலாண்மை செய்யும் நடவடிக்கை நகரங்களின் உள்ளாட்சித்துறையில் உள்ளதா என்ற தகவலே இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here