ஜனவரி 1 முதல் பள்ளிகளில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தத் தமிழக அரசு விதித்துள்ள தடை ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்று ஏற்கெனவே அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. எந்தெந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என மீண்டும் ஒரு சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் பூசப்பட்ட பை, நெய்யாத ப்ளாஸ்டிக் தூக்குப் பை, தெர்மக்கோல் தட்டு, உணவுப்பொருள் கட்டப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள் உறை, பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டு, நீர் நிரப்பப் பயன்படும் பை , பொட்டலம், பிளாஸ்டிக் உறிகுழாய், தெர்மக்கோல் குவளை, பிளாஸ்டிக் தேநீர்க் குவளை, பிளாஸ்டிக் குவளை, பிளாஸ்டிக் கொடி, உணவருந்தும் மேசையின் மீது விரிக்கப்படும் ப்ளாஸ்டிக் தாள் ஆகிய தடை செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பொருட்கள் பள்ளியில் இருந்தால் அவற்றை அகற்றிப் பிளாஸ்டிக் இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவ, மாணவிகளின் வீட்டிலும் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களிலும் பிளாஸ்டிக் இல்லாச் சூழலை உருவாக்க அறிவுரை வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here