ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்திய அணியில் விஹாரி, ஜடேஜா விளையாடாதது உறுதி செய்யப்பட்ட நிலையில் பும்ரா, அஸ்வின் ஆகியோரும் இடம்பெறுவார்களா என்பது கேள்வியாக இருந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக தமிழக வீரர் நடராஜன் களம் இறங்குகி உள்ளார். மேலும் சுழற்பந்து வீச்சாளராக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக இடம்பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய பயணத்தின் தொடக்கத்தின்போது நடராஜன் இந்திய அணிக்கான வலைப் பயிற்சி பந்துவீச்சாளராகவே இருந்தார். அதன்பிறகு, வீரர்கள் பலருக்குக் காயம் ஏற்பட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக சென்ற நடராஜன் தற்போது அனைத்து ரக சர்வதேச கிரிக்கெட்டிலும் கால் பதித்துவிட்டார்.