உலக நாடுகளின் பங்களிப்புடன் யூனிசெப் உலகம் முழுவதும் உள்ள பெண் பிள்ளைகளின் கல்வி, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்தல், எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சிறுவர், சிறுமியரின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக தொண்டாற்றி வருகிறது. 

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு இந்த நிதியம் இயங்கி வருகிறது. 2016 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இந்த நிதியத்தின் உலகளாவிய நல்லெண்ணத்தூதராக (Global Goodwill Ambassador) நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது.மத்திய அரசின் இந்த முடிவுக்கு பிரியங்கா ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் புல்வாமா தாக்குதலின் போதும் இந்திய வீரர்களுக்கு ஆதரவாக பிரியங்கா தனது டிவிட்டரில் கருத்து பதிவு செய்திருந்தார். 

இதனையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்சனை எழும்போது, பிரியங்கா ஒருதலை பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் மனித உரிமைகள் துறை மந்திரி ஷெரின்மசாரி,
பிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்து, ஐ.நாவுக்கு கடிதம்எழுதியுள்ளார்.