பாஜகவின் பதற்றத்தை எகிற வைக்கும் பிரியங்கா காந்தி

0
654

உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதியின் காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டது டெல்லியிலும், மீடியாக்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரியங்கா காந்தி கிழக்கு உத்தரபிரதேசத்தின் வாழும் பிராமணர்களின் ஆதரவை பெற்றிருக்கிறார் என்று களத்தில் செய்த ஆய்வுகள் தெரிவிக்கிறது.  

உத்தரபிரதேசத்தின் மக்கள் தொகையில் 10% முதல் 12 % வரை பிராமணர்கள் இருக்கிறார்கள். அதில் கிழக்கு உத்தரபிரதேசத்தில் அதிகமான பிராமணர்கள் வாழ்கிறார்கள். வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு அஜய் ராயை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. 

காலம் காலமாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த பிராமணர்களை திரும்பவும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக திரட்டி வந்ததில் பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம் முக்கியமான பங்கை வகிக்கிறது. 

கிழக்கு உத்தரபிரதேசத்தில் வாழும் பிராமணர்களின் வாக்குகள் அரசியல் கட்சிகளுக்கு மிகவும் முக்கியமானது. பிராமண சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் ஆதரவாளர்கள் சமீப காலங்களில்  வேறு கட்சிகளுக்கு ஆதரவு அளித்து வந்தனர். 2007 இல் நடந்த சட்டசபை தேர்தலில்   கணிசமான ஒரு பகுதியினர் பகுஜன் சமாஜ் கட்சிக்கும், பாஜகவுக்கும் ஆதரவு அளித்து வந்தனர். 

இந்நிலையில் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத்தை உத்தரபிரதேசத்தின் முதல்வராக  பாஜக நியமிக்க முடிவு செய்தது, தாக்கூர் மற்றும் பிராமண சமூகத்தினரிடையே பிளவை ஏற்படுத்தியது . சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ்வாடி கூட்டணி பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், முஸ்லிம், தலித் சமூகத்தினர்  வாக்குகளை பெற முயற்சிக்கிறது. இதனால் பிரியங்கா காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸின் முன்னாள் ஆதரவாளர்களான பிராமண சமூகத்தினரின் வாக்குகளை பெற முயற்சித்ததில் காங்கிரஸ் வெற்றியே பெற்றுள்ளது எனலாம்.   

கிழக்கு உத்தரபிரதேசத்தில் இருக்கும் 7 மாவட்டங்களான பால்லியா, கஸிபுர், வாரணாசி, பதோகி, சேலம்புர், டியோரியா மற்றும் மாவ் க்கு மார்ச் மாதத்தில் ,  நான் சுற்று பயணம் மேற்கொண்டேன். இந்த 7 மாவட்டங்களிலும் பிராமண சமூகத்தினர் அதிகமாகவே வாழ்கிறார்கள்.   இந்த மாவட்டங்களில்  பிராமண சமூகத்தினரின் ஆதரவு காங்கிரஸுக்கு அதிகரித்திருக்கிறது.  

பிரியங்கா காந்தியின் பிரச்சாரம் பிராமண சமூகத்தினரை ,பாஜகவை விட்டுவிட்டு  திரும்பவும் காங்கிரஸ் ஆதரவாளர்களாக மாற்றியுள்ளது என்பதை இந்த மாவட்டங்களில் பரவலாக   உணரமுடிகிறது . 

வாரணாசியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் ,அரசியல் விமர்சகருமான அம்ரித் பாண்டே கூறுகையில் பிராமண சமூகத்தினுள் பாஜகவை எதிர்த்து பேச முடியாத நிலைமை இருந்து வந்தது. மிகப் பெரிய பயம் ஒன்று நிலவி வந்தது.   தற்போது மக்கள் மத்திய அரசு குறித்தும்  மாநில அரசு குறித்தும் தங்களது எதிர் கருத்தை கூறி வருகின்றனர். யாராவது தைரியமானவர்கள் வழிநடத்த மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு பிரியங்கா காந்தி அதை நடத்தி காட்டியுள்ளார் என்றார். 

இந்திய அரசியலில் காங்கிரஸ் செல்வாக்குடன் இருந்த காலங்களில் தலித்துகள், முஸ்லிம்கள், பிராமணர்களின் ஆதரவினைக்  கொண்டிருந்தது. உத்தர பிரதேசத்தில், 1990 களின் தொடக்க காலங்கள் வரைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு   பிராமண சமூகத்தினரின் ஆதரவு அசைக்க முடியாததாக இருந்தது . 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு ஆர் எஸ் எஸ்  மற்றும்  பாஜகவின் தீவிரமான இந்துத்துவா கொள்கையால் காங்கிரஸுக்கு பிராமண சமூகத்தினரின் ஆதரவு குறைய ஆரம்பித்தது. மத்தியில் பாஜக வளர ஆரம்பித்த பிறகு பிராமண சமூகத்தினர் பாஜகவின் பக்கம் சாய ஆரம்பித்தனர். பாஜகவின் முதல் பிரதமராக பதவியேற்ற அடல் பிகாரி வாஜ்பாய் , பிராமணராக இருந்த காரணத்தினால் காங்கிரசுக்கு இருந்த பிராமணர்களின் ஆதரவை பாஜகவினர் பெற்றனர் 

2014 மக்களவைத் தேர்தலில் , உத்தர பிரதேசத்தில் வாழும் பெரும்பாலான உயர்ஜாதியினர் பாஜகவுக்கே வாக்களித்தனர். காங்கிரஸ் மிக மோசமாக தோல்வியடைந்தது . சேலம்புரில் வசிக்கும் ஆசிரியர் சஞ்சய் சிங் ,  கூறுகையில் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து காங்கிரசுக்கு மட்டுமே வாக்களித்து வந்த மூத்த குடிமக்கள், வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. காங்கிரசுக்கே வாக்களித்தனர் என்றார்.    

பிராமண சமூகத்தினரின் ஆதரவை காங்கிரஸ் ஒட்டு மொத்தமாக இழந்துவிடவில்லை என்ற  சஞ்சய் சிங்கின் மதிப்பீடு எனது செய்தி சேகரிப்பில் உண்மையென புரிந்தது . நான் சென்ற மாவட்டங்களில் வாழும் பிராமண  சமூகத்தினர் காங்கிரஸ் கட்சி மட்டுமே அவர்களின் சமூகத்தில் கவனம் செலுத்தும் என்று நம்புகிறார்கள். அதிகாரத்தின் இயல்பான கட்சி காங்கிரஸ்தான் என்று பிராமண சமூகத்தினர் இன்றும் நம்புகின்றனர் என்று பால்லியா, கங்காபுரில் வசிக்கும்  கேசவ் பாண்டே கூறினார். 70 வயதுக்கு மேலிருக்கும் கவிஞர் பிரபாத் பாண்டேயும் அதேக்  கருத்தை பிரதிபலிக்கிறார்.   

பிரியங்கா காந்தியின் வருகைக்குப் பிறகு காலம் காலமாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து வரும் மக்கள்,  உணர்வு பூர்வமாக மகிழ்ச்சியாக இருக்கின்றனர்  என்றும் பிரபாத் கூறுகிறார். பிரியங்கா காந்தியின் வருகை தார்மீக ஊக்கத்தை காங்கிரஸ் தொண்டர்களுக்கும் , ஆதரவாளர்களுக்கும் தந்திருக்கிறது என்றார். முன்னதாக அவர்களுக்கு கட்சித் தலைமை எந்த முக்கியத்துவமும் தரவில்லை. தற்போது பிரியங்கா காந்தியின் வருகையால் காங்கிரஸ் கட்சியை புதுப்பிக்க அவரது ஆதரவாளர்கள் புத்துணர்வோடு வேலை செய்கின்றனர் . 

பிரக்யாக்ராஜ் முதல் வாரணாசி வரையிலான 3 நாள் காங்கா யாத்திரையின் போது பிரியங்கா காந்தி ஆற்றுகரைகளில் இருக்கும் கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்தித்தது மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அம்ரித் கூறுகிறார்.  காங்கிரஸையும், பாஜகவையும் ஆதரிக்காதவர்கள் தற்போது தங்கள் கருத்துக்களை கூறுகிறார்கள்.   2014 மக்களவைத் தேர்தலின் போது பாஜக பிற பின்தங்கிய சமூகத்தினரை அணுகிய விதம்,  தற்போது பிரியங்கா காந்திக்கு பிராமண சமூகத்தினரிடையே ஆதரவை அதிகபடுத்தியுள்ளது. 2014 மக்களவைத் தேர்தலின்போது பாஜகவுக்கு  உயர்ஜாதியினர் தொடங்கி பின் தங்கிய சமூகத்திலுள்ளவர்கள் வரைக்கும் ஆதரவு தந்தனர்.  

பிரியங்கா காந்தியின் பிரச்சாரத்துக்கு ஊடக வெளிச்சம் அதிகமாகவே கிடைத்துள்ளது. கிழக்கு உத்தரபிரதேசத்துக்கு பிரியங்கா காந்தி பொறுப்பேற்ற பிறகு உத்தரபிரதேசத்தில் இருக்கும் பெரும்பாலான ஊடகங்களிலும் , செய்திதாள்களிலும்  பிரியங்காவே தலைப்பு செய்தியாக இருக்கிறார் . இதில் பாஜகவுக்கு ஆதரவான ஊடகங்களும் அடங்கும். பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் நாட்களில் கூட பிரியங்காவே தலைப்பு செய்தியாக இருக்கிறார். 

வாரணாசியில் இருக்கும் பத்திரிகையாளர்,  சுரேஷ் பிரதாப் சிங் கூறுகையில் களத்தில் பிரியங்காவின் பிரச்சாரம் நன்றாகவே எடுபடுகிறது. மக்களுக்கு என்ன செய்வோம் என்று எடுத்துக் கூற பாஜகவுக்கு எந்த விசயமும் இல்லை , 2014 தேர்தல்போல்,  இந்தத் தேர்தல் தங்களுக்கு சாதகமாக இல்லை என்பது பாஜகவுக்கே தெரியும். இந்நிலையில்  பிராமண சமூகத்தினர் அதிகமாக வாழும் பகுதிகளில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தியை களமிறக்கியுள்ளது அவர்களுக்கு ஏறுமுகத்தையே பெற்று தரும். இது வாக்குகளாக மாறுமா என்பது எனக்கு தெரியாது ஆனால் பிரியங்கா காந்தியின் வருகை காங்கிரஸின் மறுமலர்ச்சிக்கு உதவும் என்கிறார் சுரேஷ் பிரதாப் சிங். 

 பிரியங்கா காந்தியின் வருகை காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் பிராமண வேட்பாளர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து வேட்பாளர்களுக்கும்  ஆதரவைத் திரட்டித் தரும் என்று நான் பயணம் செய்த மாவட்டங்களில் வசிக்கும்  மக்கள் கூறினார்கள். பிராமண சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு பிராமண சமூகத்தினர் வாக்களிப்பார்கள் என்று பதோகியைச் சேர்ந்த  80 வயது ராம்சங்கர் மிஸ்ரா கூறினார். 2014 -இல் காங்கிரஸுக்கு எதிரான மனப்பான்மையுடனும், மோடிக்கு ஆதரவாகவும் மக்கள் இருந்தார்கள். இந்தத் தேர்தலில் மக்களின் மனநிலை மாறிவிட்டது, பாஜகவுக்கு கிடைத்த ஓட்டுகள் காங்கிரஸுக்கு கிடைக்க அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது . கட்சிகள் யாரை வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து இந்த மாற்றம் நிகழும்   என்றார் . 

டியோரியா மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் சஞ்சீவ் சுக்லா கூறுகையில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்தினால் அந்த சமூகத்தினரின் ஆதரவினைப் பெறலாம். காங்கிரஸ் கட்சி பிராமண சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்தினால் காங்கிரசுக்குதான் அவர்களின் வாக்குகள். கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸ் இருப்பதை பிராமண சமூகத்தினருக்கு அக்கட்சி உணர்த்தாமல் இருந்தது. தற்போது பிரியங்காவின் வருகை காங்கிரஸ் இருப்பதை அம்மக்களுக்கு உண்ர்த்தியுள்ளது என்றார். 

ஜனநாயக் சந்திரசேகர் பல்கலைக் கழகத்தின் தலைவர் ராஜீவ் குமார் கூறுகையில் சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கூட்டணி பிராமண சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அது காங்கிரஸுக்கு நன்மையைத் தரும் . சமாஜ்வாடி கட்சி யாதவ் சமூகத்தினரின் ஆதரவையும், பகுஜன் சமாஜ் கட்சி தலித் சமூகத்தினரின் ஆதரவையும் பெறுவதில் முனைப்பு காட்டி வருகிறது என்றார். தற்போது கிழக்கு உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கூட்டணி களத்தில் இல்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் சமாஜ்வாடி கட்சி பிராமண சமூகத்தினரை புறக்கணித்தது . இது சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு பாதகமாகவே அமையும். பிரியங்கா காந்தியின் வருகை காங்கிரசின் பலத்தை அதிகரித்திருக்கிறது .  உத்தர பிரதேசத்தில் இழந்த ஆதரவை மீண்டும் காங்கிரஸ் பெறும் என்றார். 

கிழக்கு உத்தர பிரதேசத்தில் இருக்கும் பெரும்பாலான தொகுதிகளில் மக்களவைத் தேர்தல்  மே 19 ஆம் தேதி (மக்களவைத் தேர்தலின் கடைசி கட்டமாக)  நடைபெறுகிறது. அதிக நாட்கள் இருப்பதால் பிரியங்கா காந்தி இன்னமும் அதிக மக்களை சந்திக்கலாம்  .  கல்கோடியாஸ் பல்கலைக் கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவர் ஷிரீஷ் பதக் கூறுகையில் கிழக்கு உத்தர பிரதேசத்தை பிரியங்கா காந்தியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்பது காங்கிரசின் நெடுநாளைய திட்டம். பிரியங்கா காந்தியை, சுலபமாக கையாண்டிருக்க கூடிய மேற்கு உத்தரபிரதேசத்துக்கு தலைவராக நியமிக்காமல், கிழக்கு உத்தரபிரதேசத்துக்கு தலைவராக நியமித்திருப்பது காங்கிரஸின் லட்சியமாக இருந்திருக்கிறது என்றார். பிரியங்கா காந்தியின் நியமனம் மக்களவைத் தேர்தலை மட்டும் குறிவைத்தது அல்ல, வரும் சட்ட சபை தேர்தலை குறிவைத்தும்தான். அவருடைய பேச்சு உத்தர பிரதேசத்தில் வலிமையான காங்கிரஸை உருவாக்குவதாகும். உத்தர பிரதேசத்தில் தோற்பது டெல்லியில் ஆட்சி அமைக்கமுடியாமல் போவதற்கு  சமம் என்கிறார்  ஷிரீஷ் பதக். 

By – AKHILESH PANDEY

caravanmagazine.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here