”பிராமணர்கள் எப்போதும் உயர்பொறுப்பில் இருக்க வேண்டும்” – கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ்

0
328

முற்பிறவிகளில் செய்த நல்வினைகள் காரணமாக பிராமணர்கள் இரு முறை பிறந்தவர்கள் என்று கேரள மாநில உயர் நீதிமன்ற நீதிபதி வி.சிதம்பரேஷ் பேசியுள்ளார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொச்சியில் நடந்த தமிழ் பிராமணர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், தூய்மை, உயர்ந்த சிந்தனை, நல்ல குணம், பெரும்பான்மை சைவ உணவுப் பழக்கம், கர்நாடக சங்கீதம் மீதான ஈர்ப்பு போன்ற தனித்துவம் மிக்க குணாதிசயங்கள் அனைத்தும் ஒருங்கே பிராமணர்களுக்கு உண்டு என்று அவர் பேசியுள்ளார்.

பிராமணர்கள் எப்போதும் மதவாதிகளாக இருந்ததில்லை, மக்களை நேசிப்பவர்கள், பிறருக்கு கேடு விளைவிக்காதவர்கள், அஹிம்சாவாதிகள் என்று சிதம்பரேஷ் பேசியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

நல்ல காரியங்களுக்கு தாராளமாக பொருளுதவி செய்யும் பிராமணர்கள் எப்போதும் உயர்பொறுப்பில் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

“அரசமைப்புச் சட்டப் பொறுப்பில் இருப்பதால் நான் இட ஒதுக்கீடு பற்றி கருத்துக்கூற முடியாது. ஆனால், சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தொடரவேண்டுமா? பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டுமா என்பதை இந்த சமூகம்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். குரல் உயர்த்திப் பேசவேண்டும். அழுகிற குழந்தைதான் பால்குடிக்கும்.”

“நம்மை ஓரம்கட்ட அனுமதிக்கக்கூடாது; நாம் எப்போதுமே மைய நீராட்டத்தில் இருக்க வேண்டும்; தனிக் குரலில் பாடாமல் சேர்ந்து இசைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட சிதம்பரேஷ், டிசம்பர் 2012 முதல் நிரந்தரம் ஆக்கப்பட்டார்.

Courtesy: BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here