பிராமணர்களுக்குத் தமிழக அரசியலில் இன்னும் அதிக இடம் வேண்டும்

0
1999

(ஜூன் 9இல் வெளியான கட்டுரை மறுபிரசுரம் செய்யப்படுகிறது.)

தமிழக அரசியல் பொது வெளியில் பிராமணர்களுக்கான இடம் வெகுவாக சுருங்கிவிட்டது; ”அரசியல் நமக்கானதல்ல” என்கிற பிராமணர்களின் பொறுப்பற்ற தன்மையாலும் திராவிட அரசியலின் “பெரும்பான்மைவாதத்” தன்மையாலும் இந்த இடம் சுருங்கியிருக்கிறது; இது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல; தி.மு.கவும் அ.தி.மு.கவும் பிராமணர்களுக்குக் கதவுகளைத் திறந்தே வைத்திருந்தபோதிலும் மறைமுகமான Entry Barriers அல்லது “கேட் சாத்தல்கள்” இருக்கின்றன என்று பிராமண நண்பர் ஒருவர் கவலைப்பட்டார்; உண்மைதான்; தமிழக அரசியலில் பிராமணர்களை ஒதுக்குதலைப் பேசாமல், அல்லது அந்த வரலாற்றுப் பிழையைச் சரிசெய்யாமல் நாயுடுகளை ஒதுக்குதல், முத்தரையர்களை ஒதுக்குதல், மீனவர்களை ஒதுக்குதல் பற்றியெல்லாம் பேசுவது நீதியானதாக இருக்காது.

எந்தவொரு “விடுபடுதல்” அல்லது “ஒதுக்கப்படுதல்” பற்றிப் பேசும்போதும் முழுமையான அரசியல் வெளியின் படம் கண்முன் வர வேண்டும். தி.மு.க தன்னுடன் இணைந்த முஸ்லிம் கட்சிகளுக்கு ஒன்பது இடங்களை வழங்கிவிட்டது என்று சில முஸ்லிம் நண்பர்கள் என்னிடம் சொன்னபோது ஒன்றைக் கேட்டேன்; “விஜயகாந்த் தி.மு.கவில் இணைந்திருந்தால் முஸ்லிம் கட்சிகள் நான்கு இடங்களுக்கே நாலு நடை நடந்திருக்க வேண்டி வந்திருக்கும் என்பதுதானே யதார்த்தம்.” நிற்க, நடை சாத்தல்கள் எந்தவொரு சமூகத்தின் வாய்ப்பை மறுத்தாலும் அதைப் பேசுபொருளாக்குவதன் மூலம்தான் வாசல்களும் வாய்ப்புகளும் திறக்கும்; நீண்ட காத்திருப்புகள் நிறைந்த ஜனநாயகத்தில் பிராமணச் சமூகத்தின் அரசியல் காத்திருப்பு முடிவுக்கு வர வேண்டும்.

சமவாய்ப்பு ஜனநாயகத்தில் அம்பேத்கரின் பெரும் உழைப்பால் தலித்துகளின், பழங்குடிகளின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளது; அவர்கள் பொதுநலனைப் பிரதிபலிக்கிறார்களா அல்லது தலித் நலனைப் பிரதிபலிக்கிறார்களா என்பது தொடர்ந்து பேசப்பட வேண்டிய, மேம்படுத்தப்பட வேண்டிய உரையாடலாக இருக்கிறது. முஸ்லிம் மக்கள் பிரதிநிதி மீனவர் நலனைப் பிரதிநிதித்துவம் செய்வதைவிட மீனவர் மக்கள் பிரதிநிதி மீனவர் நலனைப் பிரதிநிதித்துவம் செய்வார் என்கிற குறுங்குழு வாதங்களுக்குள் சிக்கிவிடாமல் இந்த உரையாடலை அணுக வேண்டியுள்ளது. எல்லோரையும் உள்ளடக்கிய ஜனநாயக அரசியல் மரபு என்கிற வகையில் பிராமணர் பிரதிநிதித்துவம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு மீனவர்களின் பிரதிநிதித்துவமும் முக்கியம் என்ற பரந்துபட்ட தளத்தில் இதனைப் பேசுவோம்; அரசியல் பொதுவெளியில் பிராமணர்கள் ஒதுக்கப்பட்டது உண்மை; இதற்கு பெரும்பான்மைவாத அரசியல் சொல்லாடல் காரணமாக இருந்தது; இதே மொழிதான் மற்ற சமூகப்பிரிவினரையும் ஒதுக்குகிறது, ஒதுக்கிக்கொண்டே இருக்கிறது. இதிலிருந்து தமிழகம் மெல்ல மெல்ல மேலெழும். இதைப்பற்றிய உரையாடல்களை இப்போது டாட் காம் வரவேற்கிறது.

(டெக்கான் கிரானிக்கிள் ஆங்கில நாளிதழில் 2009இல் நான் எழுதிய கட்டுரை ஒன்றின் நீட்சி இது.)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்