இன்று ஒரு சங்கப் பாடலை வாசித்துக் கொண்டிருந்தபோது சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த இத்தாலிய அறிஞர் உம்பெர்டோ ஈகோ (Umberto Eco) தனது நூலொன்றில் முன்வைத்திருந்த ஒரு கருத்து நினைவுக்கு வந்து ஒரு புன்முறுவலுக்குக் காரணமானது. இலக்கியம் குறித்தும் பிரதியை வாசித்தல் குறித்தும் நிறைய எழுதிக் கொண்டிருந்தபோது ஈகோவின் இந்த Interpretation and Over Interpretation நூல் பற்றிக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருப்பேன்.

இலக்கியத்திற்கும் வரலாறு மற்றும் பண்பாட்டுச் சூழலுக்கும் உள்ள உறவு குறித்து அதில் அவர் பேசியிருப்பார். ஒரு பிரதியை (text) அல்லது கதையாடலை (narrative) நாம் விளக்கும்போதும், விளங்கிக் கொள்ளும்போதும் நாம் அந்த விளக்கத்திற்கென எடுத்துக்கொள்ளும் தேர்வுகள் (choices) சற்று “நியாயபூர்வமானதாக” இருக்க வேண்டும். “reasonable” என்கிற சொல்லை ஈகோ இங்கு பயன்படுத்துவார். விளக்கமளிக்க (interpret) முற்படுபவருக்கு பிரதி எத்தகைய கதையாடல் உத்திகள் (narrative strategies), சமிக்ஞைகள் (signals), அடையாளங்கள் (signs) ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றது என்பது குறித்த பிரக்ஞை வேண்டும். அவற்றில் அவர் மையம் கொண்டிருக்க வேண்டும் என்பார் ஈகோ.

யாரும் அதற்குள் தனது கவலைக்கும், நோக்கத்துக்கும், பயன்பாட்டுக்கும் உரியவற்றை மட்டுமே தேடிக் கொண்டிருக்க இயலாது. அப்படிச் செய்வாரேயானால் அவர் அதை விளக்கவும் இல்லை; புரிந்துகொள்ளவும் இல்லை. இப்படிச் செய்வது பிரதியை விளக்குவது (interpret) அல்ல. இதன் பெயர் பயன்படுத்துவது (use). அவ்வளவே. வாசிப்பது என்பது பயன்படுத்துவது அல்ல. ஒரு ஆக்கம் நமக்கு மட்டுமே உருவாக்கப்பட்டது என்பதாக அதை அணுகக் கூடாது. அது பலருக்குமானது.

இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஈகோ வோர்ட்ஸ்வொர்த்தின் புகழ்பெற்ற Daffodils கவிதையை (I wandered Lonely as a cloud) எடுத்துக் காட்டுவார். அதில் ஒருவரி:

“A poet could not but be a gay”

இங்கே gay என்கிற சொல்லை எப்படிப் பொருள் கொள்வது?
“ஒரு கவிஞன் ஒருபால் உறவுக்காரனாகத் (homosexual) தவிர வேறெப்படியும் இருக்க முடியாது” – என இதை மொழிபெயர்த்துவிட முடியுமா? இது “ஒரு கவிஞன் எப்போதுமே மகிழ்ச்சியாக (happy) இருப்பான்” என்கிற பொருளைக் கொள்வதாக இல்லையா?

‘படைப்பாளி செத்துவிட்டான்’ அல்லது ‘வாசிப்பின் எல்லையற்ற சுதந்திரம்’ ஆகியவற்றுக்கான எல்லைகள் அல்லது வரம்புகள் (limitations) இவை என்பதைச் சொல்வார் ஈகோ. “நுணுக்கமாகவும் பொறுப்பாகவும் படைப்பை அணுகும் ஒரு வாசகர் (sensitive and responsible reader) வோர்ட்ஸ்வொர்த்தின் காலத்து சொல்லாட்சி, அதன் அகராதிப் பொருள்கோடல் அமைப்பு (lexical system at the time of Wordsworth) ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்பார் உம்பெர்டோ ஈகோ. “நான் வோர்ட்ஸ்வொர்த்தை விமர்சிக்க வருகிறேன் என்றால் நான் அவரது பண்பாட்டு மொழியியல் பின்னணிகளுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்”. அதை விட்டுவிட்டு அவர் விருப்பிற்கு அதை விமர்சித்துவிட முடியாது.

ஈகோ இன்னும் கொஞ்சம் விரிவாக இன்னொரு பரிமாணத்திற்கும் நம்மை இட்டுச் செல்வார். Daffodils கவிதை வோர்ட்ஸ்வொர்த்தால் எழுதப்பட்டதாக அறியப்படாமல் ஒரு காகிதத்தில் எழுதிச் சுருட்டி ஒரு பாட்டிலுக்குள் வைத்து சீல் வைக்கப்பட்டுக் கடலுக்குள் கிடந்து எடுக்கப்பட்டது என்றால் அதை எப்படி வாசிப்பது? அதை எழுதியவரின் மொழியியல் மற்றும் இலக்கணப் பின்னணி ஆகியவற்றை எல்லாம் அறியாதபோது அதை எப்படி விளக்குவது?

இப்படியான தருணத்தில் அதை வாசிக்க அல்லது விளக்க வந்தவர் அந்தப் பிரதியில் வெளிப்படும் சூழலின் (context) பின்னணியில் உள்ள எல்லாவிதமான சாத்தியமான பொருள்கோடல்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பார் ஈகோ. இப்போது அவர் “படைப்பாளியின்” உள்மனம் அல்லது விருப்பு (intention) என்பதை அல்லாமல் அந்தப் “படைப்பின்” உள்மனத்தைப் பேசுகிறார். அல்லது அந்தப் பிரதியில் வெளிப்படும் .textual strategy அதாவது பிரதியியல் நிலைபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதுவே ஒரு Model Author ன் வெளிப்பாடாகக் கருத முடியும் என்பார் ஈகோ.

சுருக்கமாகச் சொல்வதானால் ஒவ்வொரு பிரதியிலும் அதற்கே உரித்தான பிரதியியல் நிலைப்பாடுகள் உட்பொதிந்து கிடக்கின்றன. அதையே சரியானது (legitimate) எனக் கொள்ள வேண்டும் என்பது அவரின் கருத்து.

இதை எழுதிக் கொண்டிருக்கும்போது ஒரு பத்தாண்டுகளுக்கு முன் ஒரு இலக்கியச் சந்திப்பில் நடந்த ஒரு விவாதம் நினைவுக்கு வருகிறது. ‘வாசிப்பின் அரசியல்’, ‘ஆசிரியன் செத்துவிட்டான்’ என்கிற கருத்துக்கள் எல்லாம் முட்டி மோதி முழங்கிக் கொண்டிருந்த காலம் அது. அந்தப் பின்னணியில் பாரதியாரின் ஒரு கவிதையை ஒரு கவிஞர் அங்கு வாசித்தார். அது

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அதை ஆங்கொரு பொந்தினில் காட்டிடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?”

இதை ஏன் இது ஒரு அப்பட்டமான ஆண் – பெண் கலவியைப் பற்றிய பாடல் என்று கருதக் கூடாது? – எனக் கேட்டார் அவர். நீங்களும் ஒரு முறை மனதில் ஓட்டிப் பாருங்கள். அவர் கேட்டது எத்தனை ‘நியாயம்’ எனப் புரியும்.

இங்கே கவிஞர் யார் எனத் தெரியும். அவரது ஒட்டு மொத்தப் படைப்புகளையும் நாம் வாசித்துள்ளோம். அவர் காலத்திய அகராதிப் பொருள் கோடல் கட்டமைப்பு, பண்பாட்டுப் பின்புலம் எல்லாம் அறிவோம். எனவே பாரதியின் அக்கினிக் குஞ்சு பாடல் ஆண் பெண் கலவியைப் பற்றியதல்ல என்பது விளங்கும்.

அப்படியானால் அதை வாசிப்பவனுக்குச் சுதந்திரம் ஏதும் இல்லையா?
கண்டிப்பாக உண்டு. ஆனால் பாரதியின் இப்பாடலைக் கலவி குறித்த பாடலாய்க் காணுவது மட்டுமே அதன் ஒரே பொருள் அல்லது அக்கவிதையின் பொதுப் பொருள் எனக் கொள்ள முடியாது.

“பாரத நாடு பழம்பெரும் நாடு
நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்”

எனும் பாடலுக்கும் இன்று ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ சக்திகள் அளிக்கும் விளக்கத்தையும் இன்று நாம் இப்படித்தான் காண முடியும்.

புதிய தமிழ்ப் பாடநூல்கள்: ஒரு பார்வை

The Raya Sarkar Interview

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here