பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 5 வருடங்களில் 52% உயர்வு

0
279


உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் சென்று வெள்ளிக்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு ரூ.2.5 கோடி என்று குறிப்பிட்டுள்ளார். 

வாராணசியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள அவர், பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருக்கும் விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதில், தனது மனைவி பெயர் யசோதாபென்; குஜராத்தில் 1967-இல் பத்தாம் வகுப்பும், டெல்லி பல்கலைக்கழகத்தில் 1978-இல் இளங்கலை பட்டப்படிப்பும், குஜராத் பல்கலைக்கழகத்தில் 1983-இல் எம்.ஏ. பட்டமேற்படிப்பும் முடித்துள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.

அவரது அசையும் சொத்து மதிப்பு ரூ.1.41 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.1.1 கோடி. இதில், அசையா சொத்தாக, குஜராத் மாநிலம், காந்தி நகரில் வீட்டுடன் கூடிய 3,531 சதுர அடி நிலம் உள்ளது.

அசையும் சொத்தாக, நிரந்தர வைப்பு நிதித் திட்டங்களில் ரூ.1.27 கோடி முதலீடு, கையிருப்பாக ரூ.38,750 உள்ளது என்று மோடி தெரிவித்துள்ளார். 

இவற்றில், வரி சேமிப்புத் திட்டத்தில் ரூ.20 ஆயிரமும், தேசிய சேமிப்பு (என்எஸ்சி) திட்டத்தில் ரூ.7.61 லட்சமும், எல்ஐசி ஆயுள் காப்பீட்டில் ரூ.1.9 லட்சமும் முதலீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர, தனது வங்கிக் கணக்கில் ரூ.4,143 இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார். 
தன்னிடம் 45 கிராம் எடையில் ரூ.1.13 லட்சம் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்கள் இருப்பதாகவும் மோடி தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அரசிடம் இருந்து பெறும் ஊதியம், வங்கியில் இருந்து கிடைக்கும் வட்டி ஆகியவற்றை தனது வருவாய்க்கான ஆதாரமாக மோடி குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், தனது மனைவியின் பணி, அவரது வருமானத்துக்கான ஆதாரம் ஆகியவை குறித்து தனக்குத் தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனக்கு எதிராக எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்றும், அரசுக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  கடந்த 2014-ஆம் ஆண்டில் தாக்கல் செய்த வேட்புமனுவில் மோடி தனது சொத்து மதிப்பு ரூ.1.65 கோடி என்று குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here