காவிரி மேலாண்மை விவகாரத்தில் பிரதமர் மோடி சந்திக்க மறுப்பது ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கே கிடைத்திருக்கின்ற அவமானம் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் சனிக்கிழமை (இன்று) காலை நேரில் சந்தித்து, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி வலியுறுத்த வேண்டும் என்று ஒரு தீர்மானம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்படி தீர்மானம் நிறைவேற்றி ஒரு வாரகாலம் முடிந்த நிலையில், இதுவரை மத்திய அரசிடம் இருந்தும், பிரதமரிடம் இருந்தும் எந்தவொரு பதிலும் வரவில்லை. இதற்கிடையில், இன்று முதலமைச்சர் அவர்கள எங்களை அழைத்துப் பேசுகையில், ”பிரதமர் சந்திக்க மறுக்கிறார். வேண்டுமெனில் அந்தத் துறையின் அமைச்சரை நீங்கள் சந்தியுங்கள், என்று எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது. என்ன செய்யலாம்?”, என்று கேட்டார்.

நான் கேட்க விரும்புவது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியாக சென்றால் சந்திக்கிறார். அதேபோல, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சென்றால் சந்திக்கிறார். அதுமட்டுமல்ல, யார் யாரையோ தனித்தனியாக சந்திக்கின்ற பிரதமர், தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னையில், குறிப்பாக, அனைத்து கட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியும், பிரதமர் சந்திக்க மறுப்பது, எங்களுக்கு மட்டும் கிடைத்த அவமானமில்லை. ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கே கிடைத்திருக்கின்ற அவமானம் என்பதை நான் மிகுந்த வருத்தத்தோடும், வேதனையோடும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

எனவே, “என்ன செய்யலாம்?”, என்று முதலமைச்சர் கேட்டதும், உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி, பிரதமரைச் சந்திப்பது குறித்த தீர்மானம் நிறைவேற்றலாம், என்று கோரிக்கை வைத்தோம். அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டு, “திங்கட்கிழமை பொறுத்துப் பார்க்கலாம், அன்றைக்கு புதிய செய்தி வர வாய்ப்பிருக்கிறது, அப்படியொரு தகவலும் வந்திருக்கிறது. அப்படி வரவில்லை என்றால், உங்களுடைய கோரிக்கையை ஏற்று எதிர்வரும் 8ஆம் தேதியன்று சட்டமன்றத்தைக் கூட்டுகிறோம்”, என்ற உறுதியை முதலமைச்சர் அவர்கள் எங்களிடத்தில் வழங்கியிருக்கிறார்.

மேலும், அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்கவும், காவேரி விவகாரத்தில் உடனடியாக தலையிடவும் பிரதமர் மறுத்தால், சட்டமன்றத்தைக் கூட்டுகின்ற செய்தியை அறிவிப்பது மட்டுமல்லாமல், உங்களுடைய கட்சியின் சார்பில் இருக்கின்ற 50 எம்.பி.க்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இருக்கின்ற 4 எம்.பி.க்கள், அத்துனை பேரும் ராஜினாமா செய்வோம், என்றும் அறிவித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.” என்றார்.

ஜெயக்குமார் மறுப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவைச் சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்தப் பிறகு சந்திக்கலாம் என பிரதமர் கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here