சென்னையை அடுத்த மாமல்லபுரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி, அங்குள்ள முக்கிய பகுதிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திபெத்தியர்கள் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங், வருகிற 11ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை புரிய இருக்கிறார். பெய்ஜிங்கிலிருந்து சென்னை வரும் சீன அதிபர், மாமல்லபுரத்தில் வைத்து, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். பின்னர், மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களை இருவரும் பார்வையிடுகின்றனர்.

இரு நாடுகளின் பெருந்தலைவர்கள் சந்திப்பு நடைபெற இருப்பதால், சென்னையிலிருந்து, மாமல்லபுரம் வரையிலான பகுதிகளும், மாமல்லபுரத்தில் முக்கிய சுற்றுலா தளங்களும், காவல்துறையின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இரண்டு தலைவர்களும் சந்திக்கும் மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, 5 ரத்தம், கடற்கரை கோயிலில் மற்றும் கோவளம் தாஜ் ஓட்டல் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தலைவர்கள் சந்திக்கும் இடங்கள், தங்கும் ஹோட்டல், மற்றும் மாமல்லபுரத்தில் வரும் சாலைகளில், வெடிகுண்டு நிபுணர்கள் 5 குழுக்களாக பிரிந்து, மோப்பநாய் உடன், தணிக்கை பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சென்னை முதல் மாமல்லபுரம் வரை மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், சீன உளவுத்துறை அதிகாரிகள், தமிழ்நாடு உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதுதவிர, ஏடிஎஸ்பி குமார் தலைமையில், விமான நிலையத்திலிருந்து, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள முட்டுக்காடு வரை, மென்பொருள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், உயர் அதிகாரிகளின் விவரங்கள், ஹோட்டல்களில் தங்கியிருக்கும் வெளிநாட்டவரின் விவரங்களை தீவிரமாக சேகரித்து வருகின்றனர்.

மேலும், சென்னையில், கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கியிருக்கும் திபெத்தியர்களை தீவிரமாக கண்காணிக்கும், நான்கு காவல் மண்டலங்களைச் சேர்ந்த துணை ஆணையர்களுக்கு சென்னை பெருநகர காவல்துறை உத்தரவிட்டிருக்கிறது.

இதற்கிடையே, சீன அதிபரும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்திக்கும், அர்ச்சுனன் தபசு, 5 ரத்தம், கடற்கரை கோயில் உள்ளிட்ட பகுதிகளில் புல்தரைகள் அமைத்தல், சாலை அமைத்தல், நடை பாதை அமைத்தல் அலங்கார மின் விளக்குகள் பொருத்துதல் போன்ற பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.

பிரதமர் வருகையை ஒட்டி, சாலையோர சுவர்களில் வண்ண வண்ண அழகு ஓவியம் வரையப்பட்டுள்ளது. 

மாமல்லபுரம் நகரம் முழுக்க சாலை ஓரம் உள்ள பழைய கடைகள், மதில் சுவர்கள், ஓட்டல்கள், இடிந்த கட்டடங்களை புதுப்பிப்பது உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here