மோடி திருடர்தான்; உச்சநீதிமன்றம் அவரைத் திருடர் என்று சொல்லவில்லை; பிரசாரத்தை தீவிரப்படுத்தவே சொன்னேன் ; வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி

0
161

 


ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெரிவிக்காத கருத்தை பயன்படுத்தியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உச்சீநிதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு குறித்த கருத்துகளுக்காக, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கோரியிருந்தது. மேலும், ராகுல் காந்திக்கு எதிரான கிரிமினல் அவமதிப்பு மனுவை பதிவு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், பிரதமர் மோடியை திருடன் என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டதாகச் சொன்ன தனது கருத்து திரித்துக் கூறப்பட்டதாகவும், எனினும் தான் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார். மோடி திருடர்தான். ஆனால், அவரை உச்சநீதிமன்றம் திருடர் என்று சொல்லவில்லை என்று ராகுல்காந்தி அந்த பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார்

பிரசாரத்தை தீவிரப்படுத்தும் நோக்கிலேயே பிரதமரை திருடன் என கூறினேன் என்றும் உச்ச நீதிமன்றம் அந்த கருத்தை கூறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், எனது கருத்துகள் என் அரசியல் எதிரிகளால் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

ரஃபேல் ஒப்பந்தம் தீர்ப்பு குறித்த சீராய்வு மனு வழக்கில், கடந்த 10ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், சீராய்வு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களையும், நாளேடு ஆதாரங்களையும் ஏற்கலாம் எனத் தெரிவித்திருந்தது. விரைவில் ரஃபேல் விவகாரத்தில் விசாரணை தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து, அமேதி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒட்டு மொத்த நாடே காவலாளி ஒரு திருடன் என்று கூறி வரும் நிலையில், உச்சநீதிமன்றம் அதற்கு தகுந்தபடி நீதியின் பக்கம் நின்றுள்ளது. ‘காவலாளி என கூறிக் கொள்பவர் திருடன் என்று நீதிமன்றமே கூறிவிட்டது’ என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பாஜக எம்.பி மீனாட்சி லேகி, ரஃபேல் போர் விமானம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறாததை, ராகுல் பொய்யாக கூறிவருவதாகவும் அவர் மீது குற்றவியல் அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் புகார் மனு அளித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பொதுக்கூட்டங்களிலும், ஊடகங்களிலும் ராகுல் கூறுவது நீதிமன்றம் தெரிவிக்காத கருத்தாக உள்ளது.

அட்டர்னி ஜெனரல் ஆட்சேபம் தெரிவித்த குறிப்பிட்ட சில ஆவணங்களை சட்டரீதியாக ஏற்கலாம் என்று தான் தெரிவித்தோம் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூறியிருத்தது.

மேலும், ராகுல் காந்தி தனது பேச்சுக்கு ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என அவருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில், ரஃபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக பிரசாரத்தை தீவிரப்படுத்தும் நோக்கிலேயே கூறினேன் என்று குறிப்பிட்டுள்ளார்

மேலும், உச்ச நீதிமன்றம் கூறாத கருத்தை கூறியதற்காக தான் வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here