பிரசாந்த் கிஷோர் ஒரு வழக்கமான அரசியல் ஆலோசகர் அல்ல. ஆனால் அவரது அரசியல் பாணி வேறு.

அவரது கூற்றுப்படி, அரிதாகத்தான் தொலைக்காட்சியைப் பார்ப்பார், நாளிதழ்களைப் படிக்க மாட்டார், மின்னஞ்சல்களோ அல்லது குறிப்புகளோ எழுத மாட்டார். கடந்த பத்தாண்டுகளில் அவர் லேப்டாப்பே பயன்படுத்தியதில்லை. தான் பயன்படுத்தும் ஒரே கேஜெட் தனது செல்போன் மட்டுமே என்கிறார் அவர். கடந்த மூன்று ஆண்டுகளில் 86 ட்வீட்களை அவர் பதிவு செய்துள்ளார். அதில் ஐந்து லட்சம் பேர் இவரை பின்தொடருகிறார்கள்.

“நான் வேலை-வாழ்க்கை சமநிலையை நம்புபவன் அல்ல, என் வேலையைத் தவிர எனக்கு எந்த ஆர்வமும் இல்லை” என்கிறார் அவர்.

பிரசாந்த் கிஷோர் இந்தியாவின் சிறந்த அரசியல் ஆலோசகராகவும், தேர்தல் உத்திகள் வகுப்பாளராகவும் அறியப்படுகிறார். ஆனால், இப்படி தான் அழைக்கப்படுவதை அவர் விரும்புவதில்லை. உயர்மட்ட அரசியல்வாதிகளுடன் பழகுபவராகவும், தேர்தல்களில் வெற்றி பெறுவதில் நிபுணத்துவம் பெற்றவராகவும், மக்கள் மத்தியில் தாக்கம் ஏற்படுத்துபவராகவும் இவர் அறியப்படுகிறார்.

2011ஆம் ஆண்டு முதல் பிரசாந்த் கிஷோரின் அரசியல் ஆலோசனை நிறுவனம், ஒன்பது தேர்தலில் வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் பிரசார ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அதில் எட்டு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

இவரது வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க டிஸ்னி, நெட்பிளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் விரும்பின. பாலிவுட் நடிகர் ஷாருக் கானும் விரும்பினார். ஆனால், இதற்கு பிரசாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்து விட்டார்.

சாணக்கியனாக மாறுபட்ட அரசியல் பயணம்

பிரசாந்த் கிஷோர் வெவ்வேறு கொள்கைகளுடைய அரசியல்வாதிகளுக்கு வெற்றிகர ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

2014-ம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கும், இப்போது மோதியின் அரசியல் எதிரியான மம்தா பானர்ஜிக்கும் பிரசாந்த் கிஷோர் ஆலோசனைகளை வங்கியுள்ளார்.

பிரசாந்த் கிஷோர் `தொட்டதெல்லாம் துலங்கும்` வல்லமை கொண்டவர் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால், யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அவர்களை தேர்ந்தெடுத்து தனது வாடிக்கையாளராக மாற்றிக்கொள்கிறார் என இவரது விமர்சகர்கள் கூறுகின்றனர்.

44 வயதான பிரசாந்த் கிஷோர்,“ தேர்தல் உத்திகள் தொடர்பான வேலை போதும், இத்துடன் நிறுத்திக் கொண்டு விலகுகிறேன்.வேறெதையாவது வாழ்வில் செய்ய ஆசைப்படுகிறேன்“ என கடந்த மே மாதம் தெரிவித்தார்.

பிரசாந்த் கிஷோர்

ஆனால், சமீபத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பிற எதிர்கட்சி தலைவர்களைச் சந்தித்ததன் மூலம் மீண்டும் தலைப்புச்செய்திகளில் அவர் இடம்பிடித்துள்ளார். நரேந்திர மோதியின் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை அவர் ஒன்றிணைத்து வருவதகாவும், காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாகவும் ஊகங்கள் வெளியாகியுள்ளன.

இவை அனைத்தும் ஊகங்கள்தான் என்கிறார் பிரசாந்த் கிஷோர்.

“ நான் முன்பு செய்த வேலையை நிச்சயம் செய்யப்போவதில்லை. எனக்கு சில வாய்ப்புகள் உள்ளன. ஆனால், நான் இன்னும் முடிவு எடுக்கவில்லை. அரசியலுடன் எந்த சம்பந்தமும் இல்லாத ஒன்றை நான் தேந்தேடுக்க வாய்ப்பு உள்ளது. ஒரு முடிவு எடுத்தவுடன் நிச்சயம் நான் அறிவிப்பேன்“ என்கிறார் அவர்.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகளே உள்ள நிலையில், நரேந்திர மோதிக்கு ஒரு வலுவான சவாலை வழங்க முடியாமல் எதிர்கட்சிகள் போராடி வருவதாகத் தெரிகிறது.

பாஜக ஒன்றும் மிகவும் சக்திவாய்ந்த கட்சி அல்ல என பிரசாந்த் கிஷோர் நம்புகிறார். அவர்களுக்கு சவால் அளிக்க ஏற்கெனவே உள்ள கட்சிக்கோ புதிய கட்சிக்கோ வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் எதிர்கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து இதை செய்யலாம் என்கிறார் அவர்.

காங்கிரஸ் கட்சி இறங்குமுகத்தோடு உள்ளது. 1980களில் மத்தியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் மற்றும் வெற்றி பெறும் தொகுதிகளில் எண்ணிக்கை சரிந்து வருகிறது.

2019-ம் ஆண்டு தேர்தலில் 20 சதவீத வாக்குகளுடன் 52 நாடாளுமன்றத் தொகுதிகளில் மட்டுமே அந்த கட்சியால் வெற்றி பெற முடிந்தது. ஆனால், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் அக்கட்சிக்கும் 100 உறுப்பினர்கள் உள்ளார். பல மாநிலங்களில் 880 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்க்கட்சியாகக் காங்கிரஸ் உள்ளது.

“காங்கிரசில் என்ன தவறு இருக்கிறது என்பது குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால், கடந்த தசாப்தத்தில் அவர்களின் தேர்தல்களின் போது வெளிப்பட்டதை விட, கட்சியின் பிரச்சனைகள் ஆழமாக உள்ளன என்று என்னால் சொல்ல முடியும். அவர்களின் அடிப்படை கட்டமைப்பில் இந்த பிரச்னை உள்ளது“ என்கிறார் அவர்.

புதிய கட்சி தொடங்கப்போகிறேன் என அறிவிப்பது எளிதானது. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவது கடினம். மூன்றாம் அணியை ஒருங்கிணைப்பது சாத்தியமல்ல. மேலும் அது நிலையானதாக இருக்காது. மூன்றாவது அணி என்ற திட்டம் ஏற்கெனவே சோதிக்கப்பட்டு, வாக்காளர்களால் நிராகரிப்பட்டு விட்டது என கூறுகிறார் பிரசாந்த் கிஷோர்.

பிரசாந்த் கிஷோர்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என பிரசாந்த் கிஷோர் நம்புகிறார். “சரியான உத்தி மற்றும் முயற்சிகளால் அவர்கள் தோற்கடிக்கலாம் என்பதைக் காட்ட போதுமான எடுத்துக்காட்டுகள் உள்ளன“ என்கிறார் அவர்.

இந்தியாவில் வெற்றிபெறும் கட்சிகள் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும், 40-45 சதவீதத்துக்கு மேலாக ஓட்டு வாங்கியதில்லை. 2019-ம் ஆண்டு 38 சதவீத ஓட்டுகளைப் பெற்ற பாஜக 300க்கும் அதிகமான தொகுதிகளில் வென்றது என்று சுட்டிக்காட்டுகிறார் பிரசாந்த் கிஷோர்.

கிழக்கு மற்றும் தெற்கே உள்ள ஏழு மாநிலங்களில் உள்ள 200 நாடாளுமன்ற தொகுதிகளில் ஐந்தில் ஒரு பங்கை கூட பாஜகவால் தாண்ட முடியவில்லை. அங்கெல்லாம் மாநில கட்சிகள் வலிமையாக உள்ளதால், அவை பாஜக வேரூன்றுவதைத் தடுக்கின்றன. மீதமுள்ள சுமார் 340 இடங்கள், வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் உள்ளன. அவற்றில் பாஜக செல்வாக்குடன் உள்ளது. இதில் சவால் விடும் 150 இடங்களை அடையாளம் கண்டு உழைத்தால் அங்கு பாஜகவின் வெற்றி வாய்ப்பை குறைத்து விடலாம் என்பது பிரசாந்த் கிஷோரின் கணிப்பு.

வழக்கமாக, தேர்தல் பிரசாரங்களின் போது பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தில் 4,000 பேர் வரை வேலை செய்கின்றனர். தேர்தல் வெற்றிக்குப் பிறகு வேலைக்கு பணியமர்த்திய கட்சிகளுடன் அவர்கள் ஒன்றிணைந்து விடுகின்றனர்.

“தேர்தலில் சிறப்பாகச் செயல்படக் கட்சிக்குத் தேவையானதைச் செய்ய நாங்கள் உதவுகிறோம். தேர்தலின் போது அரசியல் களத்தில் சில தாக்கம் ஏற்படும். ஆனால், அது எத்தகையது என்பதை கணக்கிடுவது கடினம்“ என்கிறார் அவர்.

பிரசாரத்திற்கு வரும் மக்கள் கூட்டம் வாக்குகளாக மாறாது, தேர்தல் செலவுகள் அதிகரிப்பதால், அரசியலில் நுழைவதற்கு தடைகள் அதிகமாக உள்ளது, அரசியலிலும் சமூகத்திலும் மத மற்றும் சாதி பிரிவினை அதிகமாக உள்ளது. இவைதான் கடந்த பத்தாண்டுகளில் தான் கற்ற பாடங்கள் என்கிறார் பிரசாந்த் கிஷோர்.

பிரசாந்த் கிஷோர்

மேலும், எட்டு கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் ஓட்டு போடும் தேர்வு தேர்வுகள் எதை வைத்து இருக்கும் என இவர் என்ன நினைக்கிறார்?

“நலத்திட்டங்களை சரியாக வழங்குவது, பயனர்களை அடையாளம் காண்பது, அதிகாரமளித்தல், நுகரும் வசதி, புலப்படாத பல பிரச்னைகள் என எந்த ஆபத்துக்கும் இடம் கொடுக்கக்கூடாது என கருதுகிறேன்,” என்கிறார் பிரசாந்த் கிஷோர்.

“வாக்காளர்கள் இதைத்தான் நினைக்கிறார்கள் என்ற ஊக முயற்சியை எப்போதுமே நான் ஏற்பதில்லை. மக்கள் என் பேசுகிறார்கள் என்பதை அறிய சில முறைகளை மேம்படுத்த முயற்சிக்கிறேன். அவர்களை பேச வைப்பதன் மூலம் புதிய தகவல்கள் கிடைப்பதை பார்த்து நாங்கள் அனைவரும் ஆச்சரியம் அடைவோம்,” என்று அவர் கூறினார்.

2015இல், பிரசாந்த் கிஷோரின் அணி இந்தியாவின் வறியநிலையில் உள்ள மாநிலங்களில் ஒன்றான பிகாரில் சுமார் 40 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்றது. அந்த மாநிலம்தான் பிரசாந்த் கிஷோரின் பிறப்பிடம். அவரது அணி, பிகாரில் மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளை அறிய முற்பட்டது.

“நாங்கள் கண்டறிந்த விஷயங்களில் முதன்மையானது கழிவுநீர் வசதிக்குறைபாடு. காவல் நிலையத்தில் பதிவாகும் புகார்களில் ஐந்தில் ஒன்று மோசமான கழிவுநீர் வசதியால் விளைந்த சண்டைகள்,” என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.

மேற்கு வங்கத்தில் கடந்த ஆண்டு, மக்களின் புகார்களை பதிவு செய்ய ஒரு தொலைபேசி உதவி எண் வசதியை நிறுவ உதவினார். அதன் மூலம் சுமார் 70 லட்சம் பேர் புகார்களை தெரிவித்தனர். பலரும் ஜாதி அல்லது அது தொடர்பான சான்றிதழ்களை வழங்குவதில் காணப்படும் ஊழல் அல்லது சான்றிதழ் வழங்குவதில் தாமதம் செய்வது போன்ற புகார்களை தெரிவித்திருந்தனர். அந்த புகார்களை அடிப்படையாக வைத்து ஆறு வாரங்களில் 26 லட்சம் பேருக்கு உரிய சான்றிதழ்களை வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்த நடவடிக்கையை, தமது அணியின் சாதனையாக பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டார்.

இந்த வெற்றிக்கு மத்தியிலும், அரசியல் தனக்கு உகந்த இடம் அல்ல என்ற எண்ணத்தை கொண்டிருக்கிறார் பிரசாந்த் கிஷோர். “அரசியலை இன்னும் என்னால் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை,” என்று கூறும் அவர், “எனது பலம் பொது அறிவு மற்றும் கவனமாக கேட்பது, அழுத்தத்துக்கு மத்தியில் பணியாற்றுவதை நேசிப்பது,” என்று தெரிவித்தார்.

Also read: 👇
.

Courtesy: bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here