பியூச்சர் குழுமத்திற்கு கடன் வழங்கியவர்கள் ஒப்பந்ததிற்கு எதிராக இருந்ததால், அக்குழுத்துடன் மேற்கொள்ளப்பட்ட 24,713 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை செயல்படுத்த முடியவில்லை என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பங்குச் சந்தையிடம் ரிலையன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், “பியூச்சர் குழுமத்திற்கு கடன் வழங்கியவர்கள் –  பெரும்பாலும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் – விற்பனை ஒப்பந்தத்தை நிராகரித்ததன் விளைவாக ஒப்பந்தத்தை செயல்படுத்த முடியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளது.

24,713 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம் சில்லறை விற்பனை, மொத்த விற்பனை, தளவாடங்கள் மற்றும் கிடங்கு பிரிவுகள் என பியூச்சர் குழுமத்திற்கு சொந்தமான 19 நிறுவனங்களை ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு விற்கவிருந்தது. 

நிறுவனம் திவாலாகாமல் தவிர்க்க, ரிலையன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெற பங்குதாரர்கள் மற்றும் கடன் வழங்கியவர்களின் கூட்டத்தை பியூச்சர் குழுமம் கூட்டியது. 

அதில், பியூச்சர் குழுமத்தின் 75 சதவிகிதத்திற்கு மேலான பங்குதாரர்கள், பாதுகாப்பற்ற கடனாளிகள் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். கிட்டத்தட்ட 70 சதவிகித பாதுகாப்பான கடனாளிகள் ஒப்பந்தத்தை நிராகரித்தனர். இதுகுறித்த முடிவுகள் பங்கு சந்தையிடம் சமர்பிக்கப்பட்டது. 

ஒப்பந்தத்தை செயல்படுத்த 75 சதவிகித பாதுகாப்பான கடனாளிகளின் ஆதரவு தேவை. ஆதரவை பெற முடியாத நிலையில், நிறுவனம் மற்றும் நிர்வாகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த வாரம் நிறுவனத்திற்கு எதிராக இந்திய வங்கி திவால் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கும் பியூச்சர் குழுமத்திற்கு எதிராக திவால் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் இந்திய வங்கி மனு தாக்கல் செய்திருந்தது. அமேசான் நிறுவனத்துடன் நீண்ட சட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கடனை திருப்பி அளிக்க முடியவில்லை என பியூச்சர் குழுமம் விளக்கம் அளித்திருந்தது. 

கடந்த 2019 ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி ரிலையன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பியூச்சர் குழுமத்திற்கு எதிராக அமேசான் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. பியூச்சர் குழுமத்தின் பியூச்சர் கூப்பன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 49 சதவிகித பங்குகளை அமேசான் நிறுவனம் 1,500 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. 

பியூச்சர் குழுமத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் அமேசான் வழக்கு தொடர்ந்துள்ளது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here