ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 25ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக்கால் பேருந்து போக்குவரத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 14வது ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கைவிடுத்தனர். இதன் அடிப்படையில் கடந்த வாரத்தில் சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்து கழகங்களுடன் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் தற்போது காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை போக்குவரத்து கழகங்கள் அறிவித்திருக்கிறது.

இதற்காக வருகின்ற 25ம் தேதி முதல் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., இந்து மஸ்தூர் சபா உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து துறையில் பணியாற்றக்கூடிய 95 சதவீத தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்ய வலியுறுத்தியும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும் புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைக்கப்படவில்லை என்றும் அதுமட்டுமின்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பணம் நிலுவையில் இருப்பதாகவும் போனஸ் தொகை குறைக்கப்பட்டதால் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே இதுகுறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி உடனடியாக அரசு தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். நீண்ட நாட்கள் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் நீடித்தால் தினசரி அலுவலகம் செல்பவர்களும் வெளியூர் செல்பவர்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள் என்பதால் போக்குவரத்து ஊழியர்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி இந்த வேலைநிறுத்தம் நடக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here