பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் இன்று (புதன்கிழமை) சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சன் டிவிக்கு பிஎஸ்என்எல் அதிவேக தொலைபேசி இணைப்புகள் முறைகேடாகப் பெறப்பட்டதாகவும், அதன் மூலம் அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக, கலாநிதிமாறன், தயாநிதிமாறன், பிஎஸ்என்எல் முன்னாள் பொது மேலாளர் கே.பிரம்மநாதன், துணைப் பொது மேலாளர் வேலுச்சாமி, தயாநிதிமாறனின் தனிச் செயலர் கெளதமன், சன் டிவி ஊழியர்களான கண்ணன், ரவி ஆகிய 7 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கின் விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டு சாட்சிகளிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுப் பதிவை ரத்து செய்யக் கோரி, மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 5 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், குற்றச்சாட்டுப் பதிவை புதிதாக மேற்கொள்ளவும் உத்தரவிட்டது. இதனிடையே, இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. “குற்றச்சாட்டுப் பதிவுக்காக வழக்கு புதன்கிழமைக்கு (ஜனவரி 30) ஒத்திவைக்கப்படுகிறது.

அன்றைய தினம் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும். அன்றைக்கு குற்றம்சாட்டப்பட்டவர்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்’ என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார். இதையடுத்து இவ்வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகினர். குற்றச்சாட்டு பதிவுக்காக மாறன் சகோதரர்கள் ஆஜரான நிலையில் வழக்கு விசாரணை பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here