முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 25 ஆம் தேதி தீர்ப்பளித்தது .

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சன் டிவிக்கு பிஎஸ்என்எல் அதிவேக இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தினார். இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக மாறன் சகோதரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தயாநிதி மாறன் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம், ‘பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

இது தொடர்பாக மாறன் சகோதரர்கள், பிஎஸ்என்எல் பொது மேலாளரான கே.பிரம்மநாதன், முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுச்சாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளர் கெளதமன், சன் டிவி ஊழியர்கள் கண்ணன், ரவி ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவித்தது. இதை எதிர்த்து சிபிஐ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு: வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், தயாநிதி மாறன் மீது வழக்குத்தொடர முகாந்திரம் உள்ளது. கடந்த 2004 முதல் 2007-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்த போது, பொது ஊழியர் என்ற நிலையை மீறி குற்றச் சதியில் ஈடுபட்டு, தன்னுடைய சென்னை மற்றும் டெல்லி இல்லங்களுக்கு 764 தொலைபேசி எண்களைப் பெற்றுள்ளார். இந்தச் செயலால் அரசுக்கு ரூ.1.79 கோடி இழப்பை ஏற்படுத்தி உள்ளார்.

கலாநிதி மாறன், அப்போதைய பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் கே.பிரம்மநாதன், முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுச்சாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளர் கெளதமன், சன் டிவி ஊழியர்கள் கண்ணன், ரவி ஆகியோர் சட்டவிரோத தொலைபேசி இணைப்புகளைப் பெறுவதிலும், பயன்படுத்தியதிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். முன்தேதியிடப்பட்ட ரசீதுகளைத் தயாரித்து தயாநிதி மாறனிடம் வசூலிக்க வேண்டிய நிலுவைத் தொகைகள் எதுவும் இல்லை என போலி ஆவணங்களை வேலுச்சாமி அளித்துள்ளார்.

இந்த வழக்கில் சேகரிக்கப்பட்ட விவரங்கள் மற்றும் ஆவணங்கள், குற்றங்களைச் செய்துள்ளனர் என்பதற்கு போதுமான சான்றுகள் . தயாநிதி மாறனுக்கு வழங்கப்பட்ட வசதிகள் மிக அதிகமானவை. ஒரு அமைச்சருக்கு விதிமுறைகளை மீறி வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தவறுகளை மறைக்க, போலி ஆவணங்களை உண்மையான சான்றுகளைப் போல் பயன்படுத்தி உள்ளனர். இதன் அடிப்படையில் கணக்குகளைத் தவறாக காட்டி தயாநிதி மாறன் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

அகண்ட அலைவரிசை வசதியைப் பரவலாக்குவதில் தயாநிதிமாறன் முக்கியப் பங்கு வகித்திருக்கலாம். அதற்காக மாறன் சகோதரர்கள், அவகளின் நிறுவனம், கட்டணமே செலுத்தாமல், கட்டுப்பாடற்ற முறையில் இவ் வசதியைப் பயன்படுத்தும் சிறப்பு உரிமை அவர்களுக்கு இல்லை. மக்கள் பிரதிநிதிகளுக்கு இதுபோன்ற சிந்தனைகள் வரக்கூடாது. இந்த எண்ணத்தை அனுமதிக்கவே முடியாது.

இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கைகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், 7 பேரும் குற்றம் இழைத்தவர்களாகவே கருத முடிகிறது. ஆகவே அவர்களை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்து மீண்டும் விசாரிக்க உத்தரவிடுவதாக ஜூலை 25 ஆம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here