சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், தயாநிதி மாறன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் தயாநிதிமாறன். இந்நிலையில் அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, தனது சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் நிறுவனத்துக்கு பி.எஸ்.என்.எல்.நிறுவன தொலைபேசியின் இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு 1.76 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ அதிகாரிகள் தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதிமாறன் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதில் தயாநிதிமாறன் தரப்பில், ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், சிபிஐயின் குற்றசாட்டுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்றும், அதனால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனர். மேலும் சிபிஐ தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, இந்த வழக்கில் புதன்கிழமை (இன்று) சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் தயாநிதி மாறன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்: எழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்