மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக பாஜ, சிவசேனா இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரும் உத்தவ் தாக்கரேயின் நம்பிக்கைக்குரியவருமான சஞ்சய் ராவுத் (அக்.31)நேற்று மாலை திடீரென தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றன. பாஜ – சிவசேனா கூட்டணிக்கு ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை பலம் உள்ள போதிலும், துணை முதல்வர் பதவி மற்றும் அமைச்சரவையில் 50 சதவீத இடம் கேட்டு சிவசேனா முரண்டு பிடிப்பதால் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

இதனால் மாநிலத்தில் ஆட்சியமைக்க சிவசேனா மாற்று வழிகளை கையாளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதேவேளையில் சிவசேனா தலைமையில் ஆட்சியமைய ஆதரவளிப்பது குறித்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இந்த நிலையில், பாலாசாகேப் தோரத், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர்கள் அசோக் சவான், பிருத்விராஜ் சவான் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது வீட்டில் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின்போது சிவசேனா தலைமையில் புதிய அரசு அமைய ஆதரவளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, அவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், நேற்று மாலை திடீர் திருப்பமாக சரத் பவாரை, சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேக்கு நெருக்கமானவருமான சஞ்சய் ராவுத் சந்தித்து பேசினார்.

ஆட்சியமைப்பது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் தமது கட்சி தொடர்பில் இருப்பதாக நேற்று நடந்த சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசியிருந்த நிலையில், சரத் பவாரை சஞ்சய் ராவுத் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சரத் பவாரை சந்தித்த பிறகு பேட்டியளித்த சஞ்சய் ராவுத், ‘‘சரத் பவாரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தற்போதைய மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து அவருடன் விவாதித்தேன்’’என்றார். இந்நிலையில், சிவசேனா எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

‘புதிய அரசியல் பாடம் எழுதுவோம்’
சிவசேனா கட்சி பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீட்டின் போதே, மகாராஷ்டிராவில் அடுத்து அமையவிருக்கும் ஆட்சியில் இரு கட்சிகளுக்கும் அமைச்சரவையில் சரிபாதி பிரதிநிதித்துவம் மற்றும் தலா இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி என உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. அதனடிப்படையிலேயே மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜ.வுடன் சிவசேனா கூட்டணி அமைத்தது. முதல்வர் பதவி இல்லையென்றால் அரசியல் பாடத்தை நாங்கள் புதிதாக எழுத வேண்டியதிருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here