பாலாகோட்டில் இந்திய விமானப் படை நடத்திய வான் வழி தாக்குதலில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்ற சர்வதேச ஊடகங்களின் தகவல்கள் குறித்து பிரதமர் பேச வேண்டும் என்று கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலாகோட்டில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு முகாம்கள் மீது இந்தியா கடந்த வாரம் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வமான உறுதியான தகவல்கள் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.

இதையடுத்து, பாலாகோட் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் ஆதாரங்கள் கேட்டன. ஆனால், வீரர்களின் துணிச்சலுக்கு ஆதாரம் கேட்பதா? என்று பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை சாடினார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியோ, எதிர்க்கட்சிகளின் கருத்துகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமைந்துவிடும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் இதுதொடர்பாக கூறுகையில்,

“பாலகோட்டில் இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை எனும் சர்வதேச ஊடகங்களின் செய்திகள் குறித்து பிரதமர் கருத்து தெரிவிக்க வேண்டும். சர்வதேச ஊடகங்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறதா? என்று பிரதமரிடம் கேட்கிறேன். சர்வதேச ஊடகங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் போது மகிழ்ச்சியாக உணர்கிறீர்கள். ஆனால், கேள்வி எழுப்பும் போது மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவா கேள்வி எழுப்புவார்கள்?” என்றார்.

மேலும் மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு தீவிரவாதத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள் மோடி அவர்களே. மக்கள் உங்களை கூர்ந்து கவனித்து வருகிறார்கள், நீங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்தும், உங்கள் அரசுடைய தோல்வி குறித்தும் மக்களுக்கு நன்றாக தெரியும் என்றும் கூறினார்.

இந்திய விமானப்படையின் பாலகோட் தாக்குதலில், நான்கு பள்ளங்களும், ஒரு பாகிஸ்தானியருக்கு காயம் ஏற்பட்டதைத் தவிர, யாரும் இறக்கவில்லை என்று அல்ஜசீரா, பிபிசி, ராய்டர்ஸ், நியூயார்க் டைம்ஸ் ஆகிய செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here