பாலிவுட் மசாலா – வெளியாகும் முன்பே லாபம் சம்பாதித்த பேடு மேன்

0
131

இந்த வருடம் தமிழில் ஹிட்டான படம் எது என்று கேட்டால் யோசித்துதான் பதில் சொல்ல வேண்டியிருக்கும். கலகலப்பு 2 இந்த வாரம் தாக்குப்பிடித்தால் அதனை 2018 இன் முதல் வெற்றிப்படம் எனலாம். தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் படங்களுக்கு சக்சஸ் மீட் நடத்தினாலும் அந்தப் படங்கள் ஏற்படுத்திய சங்கடங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்கு தெரியும்.

இந்தியில் அப்படியில்லை. நாற்பது நாள்களுக்குள் இரண்டு மெகாஹிட்கள். ஒன்று பத்மாவத், இன்னொன்று பேடு மேன்.

பத்மாவத் வெற்றி பெறுமா என்ற நிலை போய் 300 கோடி கிளப்பில் இணையுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்தியாவில் 257 கோடிகள் வசூலித்துள்ளது படம். வெளிநாடுகளில் அதிகம் வசூல் செய்த இந்திப் படங்களில் தங்கல், சீக்ரெட் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த இடம். கடந்த ஞாயிறுவரை யுஎஸ்ஸில் மட்டும் பத்மாவத்தின் வசூல் 53 கோடிகள்.

அக்ஷய் குமாரின் பேடு மேன் படம் வெளியான நாள்முதல் நல்ல விமர்சனத்தையும் குறைவில்லாத கரன்சியையும் பெற்று வருகிறது. முதல் ஐந்து தினங்களில் இப்படம் இந்தியாவில் 45.92 கோடிகளை வசூலித்துள்ளது. இருபது கோடிகளில் தயாரான இந்தப் படம் சேட்டிலைட் உரிமை, டப்பிங் உரிமை, டிஜிட்டல் உரிமை, ஆடியோ உரிமை போன்றவற்றில் 20 கோடிகளுக்கு மேல் சம்பாதித்தது. அதில் தயாரிப்பாளருக்கு முப்பது கோடிவரை லாபம் கிடைத்திருக்கும் என்கிறார்கள். இந்தியா மற்றும் வெளிநாடு திரையரங்கு வருமானம் போனஸ். எனில் படத்தின் தயாரிப்பாளருக்கு எத்தனை கோடிகள் லாபம் என்று கூட்டிக்கழித்துப் பாருங்கள். கணக்கு மயக்கத்தை தரும்.

சென்ற வருடம் இந்தி சினிமாவில் அதிகம் முதலீடு செய்ததும், முதலீட்டை திரும்பப் பெற்றதும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ. ஹாலிவுட்டைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனம். ஆறு படங்களை தயாரித்து 443.62 கோடி லாபத்தை பெற்றிருக்கிறது. படத்துக்கு 73.94 கோடிகள். அடுத்த இடத்தில் இந்திய கார்ப்பரேட் நிறுவனமான ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட். ஐந்து படங்களை தயாரித்து 271.35 கோடிகள் லாபம் பார்த்திருக்கிறது. படத்துக்கு 54.27 கோடிகள்.

இந்தி சினிமாவின் வளர்ச்சிக்கும், தமிழ் சினிமாவின் வியாபார தேக்கத்திற்கும் காரணம், இங்குள்ள நடைமுறைகளில் உள்ள தெளிவின்மை. தமிழ் திரைத்துறையின் உள்கட்டுமானம் பலவீனமானது. சூதாட்டமாகவே இங்கு படங்கள் தயாரிக்கவும், விநியோகிக்கவும், திரையிடவும் செய்யப்படுகின்றன. கார்ப்பரேட்களின் வருகை உள்கட்டமைப்பை நேர் செய்யும். ஆனால், இங்குள்ள சூதாட்ட விதிகளை தாக்குப்பிடிக்க முடியாமல் கார்ப்பரேட்கள் தோற்று பின்வாங்குவதே வாடிக்கை. இப்போது ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் தமிழ் சினிமாவில் பெரும் முதலீடு செய்ய தயாராகியிருக்கிறது. அனுபவமில்லாத இயக்குனர்கள், சுயநலமிகளான கூட்டாளிகள் காரணமாக ரிலையன்ஸ் தோற்றுப் பின் வாங்கினால் தமிழ் சினிமா இன்னும் பத்து வருடங்களுக்கு கடைந்தேறுவது கடினம்.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

இதையும் படியுங்கள் : கிரிமினல் வழக்குகள்: டாப் 10 முதல்வர்கள் யார்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்