பாலிவுட் மசாலா – பாரத் மேட் இன் கொரியா

0
143

முதலில் ஒரு நல்ல தகவல்.

பாகுபலி, சுல்தான் போன்ற பிரமாண்ட படங்கள் சீனாவில் ஓடவில்லை. மாறாக சின்ன பட்ஜெட் படங்கள் சீன சந்தையை கலக்குகின்றன. உதாரணம், ஸ்ரீராம் ராகவனின் அந்தாதுன். கடந்த ஞாயிறுவரை இந்தப் படம் சீனாவில் 3.3.36 கோடிகளை வசூலித்துள்ளது. படம் இன்னும் அதிகம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 300 கோடி என்ற புதிய எல்லையுடன் சீனாவில் அதிகம் வசூலித்த இந்தியப் படங்கள் பட்டியலில் 3 வது இடத்தை அந்தாதுன் பெற்றுள்ளது. முதலிரு இடங்களில் அமீர் கானின் தங்கல், சீக்ரெட் சூப்பர் ஸ்டார் ஆகியவை உள்ளன. நான்காவது, ஐந்தாவது இடங்களில் பஜ்ரங்கி பைஜான், இந்திமீடியம். நல்ல தரமான படங்களுக்கு சீனாவில் வரவேற்பு நிச்சயம் என்பதை அந்தாதுன் உறுதி செய்திருக்கிறது.

இரண்டாவது ஒரு சோக தகவல்.

பிரமாண்டமாக தயாரான கலங்க் திரைப்படம் முதல்நாளே ரசிகர்களால் புறக்கணிக்கப்பட்டது. படத்தின் வசூல் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இந்த வருடத்தின் ஏமாற்றமளித்த படங்களின் பட்டியலில் இந்தப் படமும் சேர்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், படம் வெளியாகும் முன்பு அதற்கு இருந்த எதிர்பார்ப்பு காரணமாக டிக்கெட்விலையை ஏற்றி விற்கும்படி விநியோகஸ்தரையும், திரையரங்குகளையும் கேட்டுக் கொண்டிருந்தார் படத்தின் இயக்குநர் கரண் ஜோஹர். அமீர் கான், அமிதாப் நடித்த தக்ஸ் ஆஃப் ஹிந்தோஷ்தான் படத்தின் டிக்கெட் விலையைவிட கரண் ஜோஹர் சொன்ன டிக்கெட்விலை பத்து சதவீதம் அதிகம் என வியாபார வட்டாரத்தில் புகைச்சல் எழுந்தது. இப்போது, சாதாரண டிக்கெட் கட்டணத்தில் ஓடினாலே போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். கன்டென்ட் சரியில்லை என்றால் கரன்சி பெயராது மக்களே.

மூன்றாவது ஒரு ஆச்சரிய தகவல்

ஜுன் 5 சல்மான் கானின் பாரத் வெளியாகிறது. கடந்த சில படங்களில் கோட்டைவிட்ட சல்மான் இந்தப் படத்தில் சாதனை படைப்பார் என திரையுலகும், ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள். காரணம், பாரத் படத்தின் கதை. இந்திய சுதந்திரப் போராட்ட காலம் முதல், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையை உள்ளடக்கிய, நிகழ்காலம்வரை தொடரும் கதையிது. மோடியின் மேக் இன் இந்தியாவில் எப்படி சீனாவில் இந்தியாவுக்கான பொருள்கள் தயாராகிறதோ அதேபோல் பாரத் என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் ஒரிஜினல் தென்கொரியாவுக்கு சொந்தமானது.

2014 இல் JK Youn இயக்கத்தில் வெளியான தென்கொரிய திரைப்படம் Ode to my Father. 1950 இல் நடந்த கொரிய போரில் தந்தையையும், சகோதரியையும் தவறவிட்ட சிறுவனின் வாழ்நாள் தியாகம்தான் இந்தப் படம். சுரங்கத் தொழில் பட்ட கஷ்டங்கள், போர்முனையில் வீரனாக எதிர்கொண்ட சவால்கள் என அனைத்தும் பாரத்திலும் இடம்பெற்றுள்ளது. அதில் கொரிய போர், இதில் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை. கத்ரினா கைஃப் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை அலி அப்பாஸ் ஜhபர் இயக்கியுள்ளார். 

படத்தின் ட்ரெய்லர் பரவலான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படமும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். அது நடந்தால் கிளாசிக்குகளில் அமீர் கான் மட்டுமே நடிப்பார் என்ற பெயர் மாறி அதில் கொஞ்சம் சல்மானுக்கும் அருளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here