பாலிவுட் மசாலா – பத்மாவதிக்கு தணிக்கை வாரியம் அனுமதி அளித்தும் அடம்பிடிக்கும் பாஜக

0
236
Deepika Padukone

பத்மாவதி பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. மழை நின்றாலும் தூறல்விடாத கதையாக பாஜக அரசியல் ஆதாயத்துக்காக இன்னும் பத்மாவதியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

பத்மாவதி திரைப்படத்தில் ராணி பத்மினியை தவறாக சித்தரித்திருப்பதாகக்கூறி ராஜபுத்திர சமூகத்தினர் சிலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அதனை பாஜக அரசு விசிறிவிட்டது. ஹரியானாவைச் சேர்ந்த பாஜக பிரமுகர் பத்மாவதி படத்தில் நடித்த தீபிகா படுகோனே, இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரது தலைகளை வெட்டி வந்தால் 10 கோடி பரிசு என்று தீவிரவாதப் பேச்சு பேசினார். இந்த பிரச்சனைகளைத் தொடர்ந்து ராஜஸ்தான், ஹிமாச்சல் உள்ளிட்ட பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் பத்மாவதியை திரையிட அனுமதிக்க மாட்டோம் என அந்தந்த மாநில அரசுகளே அறிவித்தன. ஒரு திரைப்படத்துக்கு எதிராக அரசே வரிந்துகட்டியது.

டிசம்பர் 1 வெளியாவதாக இருந்த படம் பிரச்சனைகளின் காரணமாக காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பத்மாவதியை பத்மாவாத் என்ற பெயரில் வெளியிட தணிக்கை வாரியம் அனுமதி அளித்தது. ஜனவரி 26 படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

பிரச்சனைகள் முடிந்து தணிக்கை வாரியம் அனுமதி அளித்த பின்பும், ராஜஸ்தான் மற்றும் ஹிமாச்சல பிரதேச ஆளும் பாஜக அரசுகள், பத்மாவதி திரைப்படத்தை தங்கள் மாநிலத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளன. இந்த மக்கள் விரோத ஜனநாயக விரோத அறிவிப்புக்கு மத்திய பாஜக அரசு எவ்வித எதிர்வினையும் ஆற்றவில்லை. அதேபோல் தலையை வெட்டினால் பரிசு என்று அறிவித்த தீவிரவாதி மீதும் எவ்வித சட்டப்பூர்வ நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. கண்துடைப்புக்காக கட்சி மேலிடம் அவரிடம் விளக்கம் மட்டும் கேட்டுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி ராஜபுத்ர அரசியின் வரலாற்றை திரித்து படத்தில் காட்டியிருப்பதான குற்றச்சாட்டே சர்ச்சையை கிளப்பியது. உண்மையில் அந்த அரசியின் வரலாறே ஒரு கற்பனை. கற்பனையாக எழுதப்பட்ட புதினத்தில்தான் அவரது வாழ்க்கை குறித்த கதைகள் சொல்லப்பட்டுள்ளன. தற்போது பிரச்சனைகள் ஒரு கட்டுக்குள் வந்த நிலையில் ஜனவரி 26 அக்ஷய் குமாரின் பேடுமேன் திரைப்படத்துடன் பத்மாவதி வெளியாகிறது. படத்துக்கு பாஜகவும், தலைவெட்டி தீவிரவாதிகளும் தந்த விளம்பரத்தால் படம் பெரும் வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

சல்மான் கானின் டைகர் ஜிந்தா ஹே ஒரு சுமாரான ஆக்ஷன் திரைப்படம். விமர்சகர்கள் அப்படித்தான் படத்தை மதிப்பிட்டனர். ஆனால், படத்தின் வசூல் பிரமாதம். 16 தினங்களில் படம் 300.89 கோடிகளை இந்தியாவில் வசூலித்து 300 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இதன் மூலம் பஜ்ரங்கி பைஜான், சுல்தான், டைகர் ஜிந்தா ஹே என மூன்று சல்மான் கான் படங்கள் 300 கோடி கிளப்பில் இணைந்துள்ளன. 300 கோடி கிளப்பில் 3 படங்களுடன் சல்மான் முதலிடத்திலும், பிகே, தங்கல் என இரு படங்களுடன் அமீர் கான் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்