இயக்குநர் சஜித் கானுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வருட காலத்திற்கு அவர் திரைப்படமோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியோ, வெப் சீரிசோ இயக்க முடியாது. மீ2 புகார் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சஜித் கான் ஹிம்மத்வாலா, ஹம்சகல் போன்ற வெற்றிகரமான தோல்விப் படங்களை இயக்கியவர். அக்ஷய் நடிப்பில் ஹவுஸ்ஃபுல் 4 படத்தை இயக்கி வந்த நிலையில் நடிகைகள், பத்திரிகையாளர் என பலரும் இவர் மீது மீ2 குற்றச்சாட்டுகளை வைத்தனர். சஜித் கான் குற்றவாளி என்பது தெரிந்ததால் முதலில் ஹவுஸ்ஃபுல் 4 படத்திலிருந்து அவரை நீக்கினர். இதுபோன்ற குற்றச்சாட்டு காரணமாக அதே படத்திலிருந்து நானா படேகரும் விலகிக் கொண்டார். இப்போது தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு வருடகாலம் படம், தொலைக்காட்சி, வெப் சீரிஸ் என எதிலும் சஜித் கான் பணியாற்றக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

மீ2 புகார் காரணமாக சட்டத்துக்கு வெளியே சங்கத்தால் தண்டனைக்குள்ளான முதல் சினிமாக்காரர் என்ற மகுடம் சஜித் கானுக்கு கிடைத்திருக்கிறது.

மீ2 போன்ற சில பிரச்சனைகள் இருந்தாலும், பாலிவுட் சினிமா முன்னோக்கி நடைபோடுகிறது. தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் தோல்வியடைந்தால் என்ன. பதாய் ஹோ போல பல சின்ன பட்ஜெட் படங்கள் வசூலை அள்ளுகின்றன. விமர்சகர்கள் முகம் சுழித்த கேதர்நாத் படம் முதல்வார இறுதியில் 42.45 கோடிகளை வசூலித்தது. இரண்டாவது வாரத்திலும் நல்ல வசூலை பெற்று வருகிறது.இதன் வசூல் விவரம்.

முதல்வாரம் – 42.45 கோடிகள்.

இரண்டாவது வாரம்,

வெள்ளிக்கிழமை – 2.50 கோடிகள்

சனிக்கிழமை – 3.93 கோடிகள்

ஞாயிற்றுக்கிழமை – 5.33 கோடிகள்

முதல் பத்து தினங்களில் 54.21 கோடிகள்.

நேற்றும் படத்திற்கு கூட்டம் பரவலாக இருந்துள்ளது. வார நாள்களில் இந்த வரவேற்பு தொடர்ந்தால் படம் அனைவருக்கும் லாபத்தை தரும். இது இந்தியாவில் படத்தின் வசூல் விவரம் மட்டுமே.

இந்த மாதம் பாலிவுட் அதிகம் எதிர்பார்க்கும் படம் டிசம்பர் 21 வெளியாகும் ஷாருக்கானின் ஸீரோ. 2 மணி 43 நிமிடங்கள் 33 விநாடிகள் ஓடக்கூடிய சற்றே நீளமான திரைப்படம் இது. ஷாருக்கானின் வசூல் சாதனையான ஹேப்பி நியூ இயரின் வசூலை ஸீரோ தாண்டுமா என்பதே அனைவரது எதிர்பார்ப்புமாக உள்ளது. இந்தப் படத்தின் டீஸர் வெளியாகி, ஷாருக்கான் குள்ளமாக நடிப்பது தெரிய வந்த பிறகு யூடியூபில் உள்ள அப்புராஜா (அபூர்வ சகோதரர்களின் இந்தி டப்பிங்) படத்தை ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்திருக்கிறார்கள். ஷாருக் இப்போ செய்திருப்பதை இந்தாள் – கமல் – எப்பவோ செய்திருக்கிறார். அதுவும் விஎஃப்எக்ஸ் இல்லாத காலத்தில் என்று பாராட்டுகள் குவிகின்றன.

பேடுமேன் படத்துக்கு வருவோம். இந்தியாவில் வெற்றி பெற்ற அக்ஷய் குமாரின் பேடு மேன் டிசம்பர் 14 சீனாவில் வெளியானது. அவரது டாய்லெட் ஏக் பிரேம கதா படம் சீனாவில் நல்ல வசூலை பெற்றதால் பேடுமேன் அதனை தாண்டும் என எதிர்பார்த்தனர். ஆனால், படம் டேக்ஆஃப் ஆகவில்லை.

வெள்ளி – 1.47 மில்லியன் டாலர்கள்

சனி – 2.04 மில்லியன் டாலர்கள்

ஞாயிறு – 1.65 மில்லியன் டாலர்கள்.

மொத்தம் – 5.22 மில்லியன் டாலர்கள். ரூபாயில் சுமார் 37.49 கோடிகள்.

முதல்நாள் வசூல், ப்ரிவியூ காட்சிகளையும் சேர்த்து.

பாகுபலி போன்ற பிரமாண்டங்களைவிட தங்கல், இந்தி மீடியம் போன்ற உணர்வுப்பூர்வமான படங்களே சீனாவில் அதிகம் ஓடுகின்றன. அதேநேரம் 102 நாட்அவுட், பேடுமேன் போன்ற உணர்வுப்பூர்வமான படங்களும் அங்கு சோபிக்கவில்லை. சீனர்களின் ரசனை இந்திப்படவுலகுக்கு உண்மையிலேயே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்