பாலிவுட் மசாலா – சல்மான் கான் இனி சேட்டிலைட் கான்…?

0
149

சஞ்சய் லீலா பன்சாலியின் கடைசிப் படம் பத்மாவத். படத்தின் தரத்தை விடுவோம். படத்துக்கு எழுந்த எதிர்ப்பு, படத்தை இந்தியாவில் 300 கோடிகளைத் தாண்டி வசூலிக்க வைத்தது. இதற்கு முன் பன்சாலி இயக்கிய பாஜிராவ் மஸ்தானியும் பத்மாவத் போன்று பிரமாண்டமும், சர்ச்சையும் நிறைந்த வரலாற்று கதையே.

பன்சாலி போன்ற பிரமாண்ட இயக்குநர் சல்மான் கான் போன்ற கமர்ஷியல் சூப்பர் ஸ்டாரை இயக்குகிறார் என வைத்துக் கொள்வோம். என்னாகும்? கற்பனையை தட்டிவிட்டு காத்திருக்க வேண்டாம். உண்மையாகவே இது நடக்கப் போகிறது. பன்சாலியின் புதிய படத்தில் சல்மான் கான் நாயகன். நாயகி அலியா பட். படம் குறித்த மேலதிக தகவல்களை பாலிவுட் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

இந்த இடத்தில் அலியா பட், சல்மான் கான் குறித்து தலா ஒரு தகவல். முதலில் அலியா பட். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அலியா பட், தனது ஓட்டுநருக்கும், உதவியாளருக்கும் வீடு வாங்க தலா ஐம்பது லட்சங்கள் அளித்துள்ளார். இவர்கள் இருவரும் அலியா பட்டின் திரையுலக தொடக்க நாளிலிருந்து இப்போதுவரை உடன் இருப்பவர்களாம். தனக்கு சமையல் செய்து தரும் பெண்மணியின் பிறந்தநாளில், அவருக்கு அஜித் சமையல் செய்து பரிமாறினார் என்ற உணர்ச்சிக்கதை தமிழில் உலவுகிறது. அலியா பட், ஐம்பது லட்சங்கள் அளித்து அதனை தாண்டியிருக்கிறார்.

இனி சல்மான். சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் சல்மான் கான். முக்கிய மாக பிக் பாஸ். மற்ற அனைத்து மொழிகளையும்விட சல்மானின் பிக் பாஸ்தான் வெற்றிகரமாக செல்கிறது, பல சீஸன்களை கடந்திருக்கிறது. சினிமாவின் முழுமையான என்டர்டெயினரான சல்மான் எஸ்கே டிவி என்ற பெயரில் சேனல் தொடங்க விண்ணப்பித்திருப்பதாக ஒரு தகவல். சல்மான் கான் என்பதன் சுருக்கமே எஸ்கே. கடந்த சில வருடங்களாக சல்மான் கான் தனது படங்களின் சேட்டிலைட் உரிமையை தன்னிடமே வைத்துள்ளார். யாருக்கும் விற்கவில்லை. சேட்டிலைட் சேனல் தொடங்கும் எண்ணம் இருப்பதாலேயே தனது படங்களின் சேட்டிலைட் உரிமையை அவர் யாருக்கும் தரவில்லை என்கிறார்கள்.

இன்னொரு கான் குறித்து இரு தகவல்கள். ஒன்று சோகம், மற்றெnன்று பெரும் சோகம். ஆகாஷ் அம்பானியின் திருமணத்தில் கலந்து கொண்ட ஷாருக்கான் ரன்வீர் சிங்குடன் பேசிக் கொண்டிருக்கையில், அங்கு வந்த ஆகாஷ் அம்பானி ஷாருக்கானை தள்ளி நிற்க சொல்லிவிட்டு, தனது அம்மா நீட்டா அம்பானியுடன் நடனம் ஆடிய வீடியோ வைரலாகியுள்ளது. ஆகாஷ் அம்பானி ஷாருக்கானை அவமானப்படுத்திவிட்டார் என இணையம் எங்கும் குரல்கள் கேட்கிறது. வீடியோ பார்த்தால் உண்மை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

ஷாருக்கானின் சமீபத்திய படங்கள் ஓடவில்லை. கடைசியாக வெளியான ஸீரோ அட்டர் பிளாப். அதனால், மலையாளத்தில் வெளியான திலீபின் கோடரி சமக்சம் பாலன் வக்கீல் படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாருக் நடிக்கயிருப்பதாக தகவல். மலையாளத்தில் சுமாராகப் போன இந்தப் படத்தை ஏன் இந்தியில் ரீமேக் செய்து அதில் ஷாருக் நடிக்க வேண்டும்? மலையாளப் படத்தை தயாரித்தது பிரபல தயாரிப்பு நிறுவனமான வயாகாம் 18. இந்தியில் முன்னணியில் உள்ள நிறுவனம். ஷாருக் இன்னும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புதல் அளிக்கவில்லை என்பது ஆறுதல்.

மேலே உள்ள இரு தகவல்களில் எது சோகம் எது பெரும் சோகம் என்பது அவரவர் விருப்பத்தேர்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here