உத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் என்பவரும், அவரது சகோதரரும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பகுதியைச் சேர்ந்த சுரேந்திரா சிங் என்பவரின் மகள், காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், புகார் அளித்த அந்த பெண்ணின் தந்தையை பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கின் அடியாட்கள் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆயுதம் வைத்திருந்ததாக சுரேந்திரா சிங்கைப் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட சுரேந்திரா சிங்கின் உடல்நிலை திடீரென்று மோசம் அடைந்தது. இதனையடுத்து உன்னாவ் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆறு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கின் சகோதரர் உட்பட நான்கு பேரைப் போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் இந்த வழக்கை, அம்மாநில அரசு, சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இதனைத்தொடர்ந்து, பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இதையும் படியுங்கள்: லாக்-அப் டெத்; பதிவான வழக்குகள் 400; ஆனால் தண்டனை பெற்றது ஒரே ஒரு போலீஸ் மட்டுமே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here