பாலியல் வன்கொடுமை, கருக்கலைப்பு: பெண்களுக்கு நடக்கும் இரட்டை அநீதி

3
2194

(செப்டம்பர் 1, 2015இல் வெளியான சிறப்புச் செய்தி மறுபிரசுரமாகிறது.)

பத்தாம் வகுப்பு படிக்கும் பெண் அவள். வயிற்று வலி, சிறுநீர் அடிக்கடி வெளியேறுதல் ஆகிய பிரச்சனைகளால் தன் தாயின் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு செல்கிறாள். பரிசோதித்த மருத்துவர்கள் அவள் கர்ப்பமாக இருப்பதாகக் கூறுகிறார்கள். உடனடியாக அவளை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள். அங்கு மருத்துவர்கள் அவள் தன் தாயின் இரண்டாவது கணவனாலேயே பாலியல் வன்முறைக்கு ஆளானது தெரிய வருகிறது. மருத்துவர்களின் “பரிசோதனைகள்”, காவல் துறையினரின் “விசாரிப்புகள்” இவை எல்லாவற்றிற்கும் பின் 28 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து அவளுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது. இது இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்தது. இதனால், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வினை அவளால் எழுத முடியவில்லை. இது ஒரு சம்பவம்.

“பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ஏற்கனவே இரண்டு மாத கர்ப்பம். மருத்துவர்கள், “உன் அம்மா அப்படிப்பட்டவள், நீயே கூட தவறு செய்திருக்கலாம்.” என்று கூறியிருக்கிறார்கள். “நீதிமன்றத்தில் போய் கருவைக் கலைக்க ஒப்புதல் வாங்கிக் கொண்டு வா” என்றெல்லாம் அந்த பெண்ணை அலைக்கழித்தார்கள். அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே தந்தை இல்லை. தாயின் சில நடவடிக்கைகளும் சரியில்லை. சட்டப்படியான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பணம் இல்லை என்கிற சூழ்நிலையை மருத்துவர்கள் கருத்தில் கொள்வதே இல்லை” என்கிறார் நட்சத்திரா தொண்டு அமைப்பைச் சார்ந்த ஷெரின்.

பாலியல் வன்முறையினால் ஒரு பெண் கர்ப்பமானால், அந்த கருவை கலைப்பதற்கு ஒரு பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருக்கிறது. அந்தப் போராட்டம் முதலில் காவல் நிலையத்திலிருந்து துவங்குகிறது. அதிலும், பொருளாதார, சமூக ரீதியில் பின்தங்கியவர்களாக இருந்தால் இன்னும் கூடுதல் கடினம். அந்தப் பெண்ணே தனக்கு நிகழ்ந்தது பாலியல் வன்முறைதான் என காவல் துறையினரிடம் நிரூபிக்க வேண்டும். பின்தான் அவர்கள் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வார்கள். இதில் அந்தப் பெண்ணின் தாய் குடும்ப உறவில் சரியில்லை என்றால், மகளும் அப்படித்தான் என்று பட்டம் கட்டி விடுவார்கள்.

இன்னொரு சம்பவம். ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் 14 வயது பெண். 11 வயதிலிருந்தே தன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்கு வரும் இளைஞன் ஒருவனால் பலமுறை பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகியிருக்கிறாள். 2014ம் ஆண்டு, நவம்பர் மாதத்தில் பாலியல் வன்முறைக்கும் ஆளாகியிருக்கிறாள். கர்ப்பமும் ஆகியிருக்கிறாள். அவளுடைய தாய் மனநலம் குன்றியவர். தந்தை கூலித் தொழிலாளி. இந்தப் பெண்ணிடமும் மருத்துவர்கள் மிகவும் அலட்சியமாக நடந்திருக்கிறார்கள். “பரிசோதனை அறிக்கை வர வேண்டும்”, “காவல் துறையினர் எஃப்.ஐ.ஆர் சமர்ப்பிக்க வேண்டும்” என்று சொல்லி கருவைக் கலைக்க தாமதம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட கரு உண்டாகி ஐந்து மாதங்கள் கழித்துதான் கருக்கலைப்பு செய்திருக்கிறார்கள். பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகி மனதாலும் உடலாலும் பாதிப்புக்குள்ளான பெண்ணை அந்த வன்முறையால் உருவான கருவைச் சுமந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் வேதனையானதாகவே இருக்கும்.

ஆனால், நமது சட்டம் மிகத் தெளிவாக இந்த பாதிப்புகளிலிருந்து விடுபட வழி சொல்லியிருக்கிறது. கருக்கலைப்பு சட்டம் 1971, “ஒரு பெண்ணின் மனதுக்கோ, உடலுக்கோ ஆபத்து ஏற்படும் பட்சத்தில் 20 வாராங்களுக்குள் உள்ள கருவைக் கலைக்கலாம்” என்று சொல்கிறது. அதிலும், பாலியல் பலாத்காரம், குழந்தைத் திருமணம் ஆகியவற்றால் ஏற்பட்ட கர்ப்பத்தைக் கலைக்க எந்தவிதமான தாமதமும் செய்யக்கூடாது என்று சொல்கிறது. சமீபத்தில் குஜராத்தைச் சேர்ந்த பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் 22 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இதை முன்னுதாரண தீர்ப்பாக சமூகவியலாளர்கள் பார்க்கிறார்கள்.

ஆனாலும், ஏன் எல்லாம் அறிந்த மருத்துவர்கள் இந்த தாமதத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதை ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் வசந்தா மணியிடம் கேட்டோம். அவர் கூறியதாவது, “நாங்க எந்த ஆதாரத்தையும் கேட்காமல் கருவைக் கலைத்தால் சாட்சியங்களைக் கலைத்துவிட்டோம் என்று காவல் துறையினர் எங்களைக் குறை கூறுவார்கள். இங்கு வருகிற இதுபோன்ற விவகாரங்கள் எல்லாம் பாலியல் வன்முறையோடு சேர்த்துவிட முடியாது. இரண்டு பேர் காதலித்துக் கல்யாணம் செய்துக் கொண்டிருப்பார்கள். அவர்களைப் பிரிக்க பெண்ணின் பெற்றோரே “இவன் என் மகளைக் கர்ப்பமாக்கி விட்டான்” என்று பொய் சொல்வார்கள். எனவே இது பாலியல் வன்முறைதான் என்று தெரிந்தால்தான் நாங்கள் கருக்கலைப்பு செய்ய முடியும்.” என்றார்.

நட்சத்திரா அமைப்பைச் சார்ந்த ஷெரின் மார்ச் 2015-ல் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையில், “இனி பாலியல் வன்முறையில் கர்ப்பம் அடைந்தால் 20 வாரங்களுக்குள் உண்டான கருவைக் கலைக்க எந்த விதமான காவல் துறை ஆவணங்களும் தேவையில்லை” என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், 12 வாரங்களுக்குள் உள்ள கருக் கலைப்பு என்பது ஒரு மருத்துவரின் மேற்பார்வையுடன் நடக்க வேண்டும். 12 – 20 வாரங்களுக்கு மேலான கருவைக் கலைக்க இரண்டு மருத்துவர்களின் ஆலோசனை வேண்டும்.
“இந்த தீர்ப்பு வருவதற்கு முன்னால், கருவைக் கலைத்து டி.என்.ஏ. சோதனைக்கு உட்படுத்த நீதிபதியின் ஒப்புதல் வேண்டும். இனிமேல் இது எல்லாம் தேவை இல்லை. அந்தப் பெண் 18 வயதுக்கு மேல் இருந்தால் அவளுடைய ஒப்புதலுடன் கருக்கலைப்பு செய்யலாம். மைனராக இருந்தால் அவரது பெற்றோர் அல்லது சட்ட பாதுகாப்பாளரின் ஒப்புதல் வேண்டும். உண்மையான பெற்றோரா என்பதற்கு குடும்ப அட்டை போன்ற அடிப்படை ஆதாரமாவது வேண்டும்.” என்று கூறுகிறார் ஆர். எஸ். ஆர். எம். மருத்துவமனையின் பதிவாளர், மல்லிகா.

கருக்கலைப்பு முடிந்த பின் ஒரு மாதம் கழித்து உடல் பரிசோதனைக்கு அவர்கள் வர வேண்டும். ஆனால் அப்படி இதுவரை எந்த ஒரு பெண்ணும் கருக்கலைப்புக்குப் பின்பு மருத்துவமனைக்கு வருவதில்லை என்றும் மருத்துவர்கள் குறை கூறுகிறார்கள்.

ஒரு பெண் பாலியல் வன்முறைக்குப் பின்தான் நிறையத் தாக்குதலுக்கு உள்ளாகிறாள். அவர்கள் தங்களது வீடு, படிக்கின்ற பள்ளிக்கூடம் என அனைத்தையும் மாற்றிக் கொள்கிறார்கள். கருக்கலைப்புக்காக தங்கியிருக்கும் ஒவ்வொரு நாளும் வேதனைதான். “நீ யார்? உன் கணவன் யார்?” என்பது போன்ற கேள்விகளை மற்றவர்கள் கேட்பார்கள். ஆக, மருத்துவமனையிலும், காவல் நிலையத்திலும் அந்தப் பெண்ணுக்கு சரியான பாதுகாப்பு இல்லாததால்தான் அந்த இரண்டு இடத்திற்கும் வருவதற்கு பெண்கள் தயங்குகிறார்கள். பாலியல் வன்முறை செய்தவனையே திருமணம் செய்து கொள்ளவும், குழந்தையைப் பெற்றுக் கொள்ளவும் வற்புறுத்தப்படுகிறார்கள்.
தன் தாயின் இரண்டாவது கணவனால் பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, “மருத்துவர்களும் காவல் துறையினரும் என்னைவிட எங்க அம்மாவைத்தான் ரொம்பத் திட்டுவாங்க. என் அம்மா பாவம். என்னால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறார்” என்று கூறுகிறார். அதே வேளையில் “நடந்ததை கனவு என்று நினைத்து மறந்து விட்டேன். நான் படிச்சு டீச்சராகி அம்மாவையும் தம்பியையும் நல்லாப் பாத்துக்கணும்” என்று நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் பேசுகிறார். இதேபோன்று பாதிக்கப்பட்ட, மற்றொரு பெண்ணும், “இப்ப நல்லாப் படிக்கிறேன். விடுதியில் இருப்பதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. வெளியில் செல்லும் போது நம்பிக்கைக் குறைவாக உணர்கிறேன். அம்மா, மன நலம் பாதிக்கப்பட்டவர். அவரையும் பார்க்க வேண்டும் என்று ஆசை” என்று ஏக்கத்துடன் சொல்லும் இவரும் விரைவில் தேறி விடுவார் என்று நம்பலாம்.

பாலியல் வன்முறைக்குப் பிறகு பல்வேறு மன, உடல் இடர்பாடுகளால் சிக்குண்டு கிடக்கும் இவர்களைப் போன்ற பெண்கள் சுதந்திர வெளிக்கு வர மருத்துவர்கள், காவல்துறையினரின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது.

இந்தச் செய்தியின் சுருக்கத்தை ஒலி வடிவில் நந்தினி வெள்ளைச்சாமி இங்கு வழங்குகிறார்:

3 கருத்துகள்

  1. கருத்துக்கள் பொதிந்த கட்டுரை…
    இதுபோன்ற கருத்துக்கள் சமூகத்தில் ஆழ பதியவைக்கப்பட வேண்டும்…
    ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்…

ஒரு பதிலை விடவும்