நேர்மையாக தேர்வு எழுதியவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்ற தமிழக அரசு முன் வரவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் செயல்தலைவருமான ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, மதிப்பெண் முறைகேடு காரணமாக ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து இருப்பது, அதிமுக ஆட்சியில் எந்தளவிற்கு பணியாளர் நியமனங்களில் ஊழல் மலிந்து இருக்கிறது என்பதை வெளிக்காட்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து சி.பி.சி.ஐ.டி. பிரிவு விசாரணைக்கோ அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கோ கடைசிவரை மாற்றாமல் சென்னை மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய குற்றப்பிரிவு மட்டுமே விசாரணை நடத்தி, கீழ்மட்டத்தில் உள்ள ஊழியர்கள் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்களே தவிர, மாபெரும் மதிப்பெண் ஊழலுக்குத் துணை போன உயரதிகாரிகளையோ, அதில் சம்பந்தப்பட்ட முக்கிய நிறுவனங்களையோ அல்லது ஆளுங்கட்சியினரையோ தொடவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

1.33 லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வெழுதியுள்ள நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்களின் தேர்வை ரத்து செய்வதை தவிர்த்துவிட்டு, நேர்மையாக தேர்வு எழுதியவர்களின் முடிவுகளை மட்டும் வெளியிட்டிருக்க வேண்டிய ஆசிரியர் தேர்வு வாரியம், இப்படி ஒட்டுமொத்தமாக தேர்வை ரத்து செய்திருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை மாநகர காவல்துறையிடம் உள்ள மிகப்பெரிய இந்த ஊழல் வழக்கை, சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி, இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு வேலை வாய்ப்பில் விபரீத ஊழலுக்கு துணை போன அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்