பாராளுமன்றத்தில் திமுக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள போதிலும், பாராளுமன்ற தரைத்தளத்தில் அக்கட்சிக்கு இன்னும் அலுவலகம் ஒதுக்கப்படவில்லை.

பாஜக, காங்கிரஸை தொடர்ந்த அதிக எம்.பி.க்கள் கொண்ட மூன்றாவது பெரிய கட்சியாக திமுக உள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளை கைப்பற்றியது. திமுகவிற்கும் மட்டும் 24 மக்களவை எம்.பி.க்கள் உள்ளனர் ( உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 3 கூட்டணி வேட்பாளர்கள் உள்பட). இதுதவிர 5 மாநிலங்களை உறுப்பினர்களும் உள்ளனர். இந்நிலையில் திமுகவிற்கு பாராளுமன்ற வளாகத்தில் இன்னும் அலுவலகம் ஒதுக்கப்படாமல் உள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி கண்ட அதிமுக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. இதுதவிர அப்போது 13 மாநிலங்களை உறுப்பினர்களும் அதிமுக சார்பில் இருந்தனர்.  இதனையடுத்து அக்கட்சிக்கு பாராளுமன்ற தரைத்தளத்தில் அலுவலகம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி கண்டது. தற்போதும் அதிமுக அந்த அலுவலகத்தையே பயன்படுத்தி வரும் நிலையில் திமுகவிற்கு இன்னும் அலுவலகம் ஒதுக்கப்படவில்லை.

இதுகுறித்து திமுக வட்டராங்கள் தெரிவிக்கும்போது, பாராளுமன்ற நடவடிக்கையில் எப்படி செயல்பட வேண்டும். முக்கியமான விவாதங்களில் கட்சியின் நிலைப்பாட்டை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதை கட்சி உறுப்பினர்கள் சேர்ந்து ஆலோசிப்பதற்கு கூட அலுலவகம் இல்லை என தெரிவிக்கின்றனர். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பாராளுமன்ற தரைத்தளத்தில் அலுவலகம் ஒதுக்கப்படுவது என்பது ஒரு பெருமையான விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து திமுக எம்.பி. டி.ஆர் பாலு கூறும்போது, “ நாங்கள் ஏற்கெனவே அலுவலகம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளளோம். இதுதொடர்பாக மக்களவை சபாநாயகரை நானே மூன்று முறை சந்தித்து பேசியுள்ளேன். ஆனால் இன்னும் அலுவலகம் ஒதுக்கப்படவில்லை” எனக் கூறியுள்ளார்.