மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பாரதிய ஜன சங்கத் தலைவரின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திரிபுராவில், பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட இல்லாமல் இருந்தநிலையில், தற்போது நடந்து முடிந்த அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலையடுத்து அங்கு தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரிகளின் ஆட்சியை அங்கு பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது.

இந்நிலையில், திரிபுராவின் பெலோனியா நகரிலிருந்த லெனின் சிலையை, பாரத் மாதா கீ ஜே என்ற கோஷத்துடன், பாஜகவினர் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்துத் தள்ளினர். இந்தச் சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று, தமிழகத்திலும் பெரியார் சிலை உடைக்கப்படும் என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியிருந்தார். அதன் பின்னர் அதற்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, செவ்வாய்க்கிழமை (நேற்று) இரவு, வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை சிலர் சேதப்படுத்தினர். இது தொடர்பாக பாஜக நகரச் செயலாளர் முத்துராமன், பிரான்சிஸ் ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் காலிகட் பகுதியிலுள்ள, பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்