பாபர் மசூதியை உச்சியின் மேல் ஏறி உடைத்தெறிந்தேன்; பிரக்யா சிங்க்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்

0
159

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் தனக்கும் பங்கு இருப்பதாகக் கூறிய, மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் 
தொகுதியின் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.


இருப்பினும் தான் கூறிய கருத்தில் உறுதியாக இருப்பதாகவும், சட்டப்படி அதற்கு பதில் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். அதேசமயம், பிரக்யா சிங்கிற்கு அனுப்பிய நோட்டீஸூக்கு அவர் ஞாயிற்றுக்கிழமைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது .


தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரக்யா சிங் அளித்த பேட்டியில், “”அயோத்தியில் மாபெரும் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும். அங்கு அதற்கு முன்பு இருந்த நினைவுச் சின்னத்தை அழிக்க நானும் சென்றிருந்தேன். அதன் உச்சியின் மேல் ஏறி உடைத்தெறிந்தேன். அதுகுறித்து மிகுந்த பெருமையடைகிறேன். ஒரு கரும்புள்ளியை துடைத்தெறிவதற்கான பலத்தை கடவுள் எனக்கு அளித்தார்” என்றார்.


இதையடுத்து, போபால் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சுதம் காதே, கடந்த சனிக்கிழமை இரவு பிரக்யா சிங் தாக்குருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
தேர்தல் நடத்தை விதிகளுக்கான தொகுப்பு 4-இல் கூறப்பட்டுள்ளதன்படி, சமூக நல்லிணக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும், ஜாதிகள், மதங்கள், சமூகங்கள் மற்றும் இனக்குழுக்களுக்கு இடையே மோதலை உருவாக்கக் கூடாது என்ற நடத்தை விதியை நோட்டீஸில் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். 


இதற்கிடையே பிரக்யா சிங், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது, “”எனது பேச்சில் மாற்றமில்லை. ராமர் கோயில் கட்டப்பட வேண்டும். கோயில் கட்ட விடாமல் யாரும் என்னை தடுக்க முடியாது” என்றார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here