பாத்திமா மரணத்திற்கு சென்னை ஐஐடியில் தொடர்ந்து நிலவும் மத – சாதியப் பாகுபாடே காரணம் : கேரள எம்.பி பிரேமச்சந்திரன்

0
229

சென்னை ஐஐடியில் தற்கொலை செய்துக்கொண்ட மாணவி ஃபாத்திமா மரணத்திற்கு மத – சாதியப் பாகுபாடே காராணம் காரணம் என கொல்லம் மாவட்ட எம்.பி என்.கே பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீஃப் (18). சென்னை ஐஐடியில் எம்.ஏ ஹூமானிட்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் (ஒருங்கிணைந்த) பாடப்பிரிவில் முதலாமாண்டு படித்து வந்த இவர், கடந்த வாரம் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அனைத்து தேர்வுகளிலும் முதலிடம் பிடிக்கும் பாத்திமா, கடந்த மாதம் நடைபெற்ற இண்டர்னல் தேர்வில் ஒரே ஒரு பாடத்தில் மட்டும் குறைவான மதிப்பெண் பெற்றதாகவும் அதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், மாணவியின் செல்போனில் பதியப்பட்ட சில குறிப்புகளை சுட்டிக்காட்டி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தனது மகளுக்கு ஏற்படுத்திய மன உளைச்சல்தான் மரணத்துக்கு காரணம் என தற்கொலை செய்து கொண்ட மாணவி ஃபாத்திமாவின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த என்.கே பிரேமச்சந்திரன் எம்.பி மாணவி ஃபாத்திமா மரணம் குறித்து நாடாளுமன்றத்தில்  பேசினார். அப்போது, “மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யில் படித்து வந்த எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்துக்கொண்டார். அவர் படிப்பில் சிறந்த மாணவி. அதனால் பாத்திமா மரணத்தை எதார்த்தமாக எடுத்துக்கொள்ள முடியாது.

கடந்த ஒருவருடத்தில் மட்டும் சென்னை ஐ.ஐ.டி.,யில் 1 பேராசிரியர், 4 மாணவர்கள் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்க நிர்வாகமும் அரசும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் தான் பாத்திமா மரணமும் நிகழ்ந்துள்ளது. அவர் தனது தற்கொலைக்கு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் காரணம் என செல்போனில் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

அதுமட்டுமின்றி மாணவி மரணத்திற்கு மதம் ஒரு பிரச்சனையாக இருந்துள்ளது. அந்த கல்லூரியில் சாதி – மத பாகுபாடு தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. அதனால் மதமும் அவர் மரணத்திற்கு ஒரு காரணம் என நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதுமட்டுமின்றி, மாணவியின் பெற்றோர்கள் கல்வி நிறுவனத்தை கலங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டதாக அவர்கள்மீது ஐ.ஐ.டி நிர்வாகம் போலிஸில் புகார் அளித்துள்ளது. இது மிகவும் துரதிஷ்டமானது.

இது ஒரு தனிபட்ட பிரச்சனை அல்ல. சென்னை ஐ.ஐ.டி.,யில் எதிர்காலத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களின் நலன் சார்ந்தது. எனவே ஃபாத்திமா மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் விசாரணைக் குழு அமைத்து இனி இதுபோல உயிரிழப்புகள் நடக்காமல் தடுக்கவேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here