ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ரகசிய ஆவணங்கள், பாதுகாப்புத் துறை அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
மேலும், அந்த ஆவணங்களின் அடிப்படையில் தி ஹிந்து நாளிதழ் கட்டுரைகளை வெளியிட்டுள்ளதாகவும், இது அதிகாரப்பூர்வ ரகசியங்கள் பாதுகாப்புச் சட்ட விதிமீறல் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய விமானப் படைக்கு, பிரான்ஸின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக மத்திய பாஜக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ரூ.58,000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதனிடையே, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், ரஃபேல் ஒப்பந்த நடைமுறையில் சந்தேகம் கொள்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பரில் தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி , முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் சௌரி, யஷ்வந்த் சின்ஹா, சமூக ஆர்வலர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில், “ரஃபேல் விமானத்தின் விலை, கொள்முதல் நடைமுறை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான தகவல்களை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

அந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ரகசிய ஆவணங்கள், பாதுகாப்புத் துறை அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

திருடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தி ஹிந்து ஆங்கில நாளிதழில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இது, அதிகாரப்பூர்வ ரகசியங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், இந்த கட்டுரைகள் நீதிமன்ற விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்படி 6 மாத சிறை தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த கட்டுரைகளின் அடிப்படையில் முன்வைக்கப்படும் மனுதாரர்களின் வாதங்களை நிராகரிக்க வேண்டும் என்றார் கே.கே.வேணுகோபால்.

அப்போது, ஆவணங்கள் திருட்டு தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அதற்கு, “இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது; எனினும், முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யப்படவில்லை’ கே.கே.வேணுகோபால் பதிலளித்தார்.

மேலும், ரஃபேல் விவகாரம், பாதுகாப்புத் துறை கொள்முதல் தொடர்புடையதாகும். இதனை நீதிமன்ற ஆய்வுக்கு உள்படுத்த முடியாது என்று அவர் வாதிட்டார்.

அண்மையில் இந்திய-பாகிஸ்தான் விமானப் படையினர் இடையே ஏற்பட்ட மோதலை சுட்டிக் காட்டிய அவர், பாகிஸ்தானின் எஃப் 16 ரக போர் விமானத்தை எதிர்கொள்வதற்கு ரஃபேல் போர் விமானங்கள் தேவைப்படுகின்றன. தற்போதுள்ள சூழலில், பாதுகாப்புத் துறை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது என்று வாதிட்ட கே.கே.வேணுகோபால், அனைத்து மறுஆய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, “இந்த வழக்கு, தீவிரமான ஊழல் குற்றச்சாட்டு தொடர்புடையதாகும். இதில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான கேள்வி எதுவும் எழவில்லை’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான முந்தைய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். எனினும், நீதித் துறையை அவமதிக்கும் வகையில் அவர் கருத்து தெரிவித்ததை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், அவரது மனுவை விசாரிக்கப் போவதில்லை என்

இந்து நாளிதழில் என்.ராம் எழுதியுள்ள கட்டுரையில், ‘ரஃபேல் ஒப்பந்தத்துக்கு பிரான்ஸ் தரப்பு, வங்கி காரன்டி கொடுக்காததால் இந்திய அரசுக்கு அதிக செலவு ஆனது. 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் 36 போர் விமானங்கள் வாங்க கையெழுத்திடப்பட்ட ரஃபேல் ஒப்பந்தம், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 126 விமானங்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தை விட 1,963 கோடி ரூபாய் அதிகமாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையில் ஆதாரமாக இந்தியப் பேச்சுவார்த்தைக் குழு, ராணுவத் துறை அமைச்சகத்துக்கு 2016, ஜூலை 21 ஆம் தேதி எழுதிய கடிதத்தை முன்வைத்துள்ளது இந்து பத்திரிகை. இந்தக் கட்டுரை உச்ச நீதிமன்ற விசாரணையின் மீது செல்வாக்கு செலுத்துவதாகும் அதுவே நீதிமன்ற அவமதிப்புக்குரியதாகும் என்று அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.

மேலும் நீதிமன்றத்தில் பேசிய அட்டர்னி ஜெனரல், ‘ஆவணங்கள் எப்படி கசிந்தன என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம். ரகசிய ஆவணங்களை வைத்து, முறையிடுவது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். எனவே, ரஃபேல் விவகாரத்தில் மறு விசாரணை கோரும் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here