அமெரிக்காவின் இந்திய பசிபிக் பிராந்தியக் கொள்கையில் இந்தியா மிக முக்கியமான நாடு என்று அமெரிக்கப் பாதுகாப்புத்துறையின் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.

ரஷியாவிடம் இருந்து எஸ் 400 என்ற டிரையம்ப் அதிநவீன ஏவுகணையை வாங்குவதற்கு இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து, அமெரிக்கா மிக வெளிப்படையாக தனது அதிருப்தியை ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவை பாராட்டும் வகையில் பெண்டகன் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் பாதுகாப்புத்துறையில் திறன்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகவும் பெண்டகன் கூறியுள்ளது.

முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பெண்டகனின் ஆய்வறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டார். அவ் அறிக்கையில், ”தெற்காசியாவில் அதிநவீன மற்றும் தொலைதூர ஏவுகணைகளை சோதனை செய்யும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவுடன் திறன்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. இந்திய பசிபிக் பிராந்தியத்தில் மிக முக்கியமான பாதுகாப்பு சார்ந்த நட்பு நாடாக இயற்கையாகவே இந்தியா உருவெடுத்துள்ளது. ரஷியா, சீனா ஆகிய நாடுகள் மேற்கொண்டுவரும் ஏவுகணைத் திட்டங்கள் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் அதன் எல்லையை ஒட்டிய பகுதிகளின் பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவுக்கான ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன், அந்நாட்டின் தலைமைக்கு ஆதரவளிப்போம் என்று கடந்த 2017ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அமெரிக்க உத்திசார் கொள்கை ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததை பெண்டகன் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவுக்கு அண்டை நாடுகளிடம் உள்ள அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு தாட் என்ற அதிநவீன ஏவுகணைகளை வழங்குமாறு அமெரிக்காவிடம் கோரப்பட்டது. ஆனால், முந்தைய அதிபர் ஒபாமா தலைமையிலான அரசு அதற்கு ஒத்துழைப்பு அளிக்காத நிலையில், அதேபோன்ற டிரையம்ப் வகை ஏவுகணைகளை ரஷியாவிடம் இருந்து வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here