சாத்தூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மனைவி கர்ப்பிணியாக உள்ளார். அவர் வழக்கமான பரிசோதனைக்கு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்குச் சென்று வந்தார்.

அப்போது அவருக்கு ரத்த சோகை இருப்பது தெரியவந்தது. எனவே சிவகாசி அரசு ஆஸ்பத் திரியில் இருந்து ரத்தம் கொண்டு வந்து செலுத்தினர்.

அதன் பின்னர் கர்ப்பிணியின் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. எனவே விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கமுதி வாலிபர் வழங்கிய ரத்தத்தை செலுத்தியதில் எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு ஏற்பட்டது உறுதியானது.

எச்.ஐ.வி. பாதித்த கர்ப்பிணியை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தனி வார்டில் 9 டாக்டர்கள் அடங்கிய குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கர்ப்பிணியின் உடல் நிலை குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் (பொறுப்பு) சண்முகசுந்தரத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

எச்.ஐ.வி. பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு 9 டாக்டர்கள் அடங்கிய குழு 24 மணி நேரமும் கண்காணித்து தீவிர சிகிச்சை அளிக்கிறது.நோய் தடுப்பு மருந்துடன் சத்து மாத்திரைகளும் வழங்கப்படுகிறது. மேலும் கருவில் இருக்கும் சிசு பாதிக்கப்படாமல் இருக்க மருந்து வழங்கப்படுகிறது.தொடர் சிகிச்சையின் காரணமாக கர்ப்பிணியின் உடல் நலம் சீராக உள்ளது. தொடர்ந்து அவரது உடல் நிலையை கவனித்து வருகிறோம்.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.

Courtesy : maalaimalar

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்