தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் தேமுதிக தங்கள் கூட்டணியில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன. பாஜகவுடன் தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருவது உண்மைதான். என்று அக்கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

தேமுதிக கொடி நாள் விழா இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.  தேமுதிக கட்சிக்கொடியை ஏற்றி வைத்த எல்.கே.சுதீஷ் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ”மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்திலுள்ள பல கட்சிகள் கூட்டணி குறித்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பாஜகவுடன் தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருவது உண்மைதான்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். இரண்டு வாரங்களில் அவர் சென்னை திரும்புவார். அதற்குப் பிறகு கூட்டணி குறித்து உறுதி செய்யப்படும்.

தலைவர் விஜயகாந்த் எந்தத் தொகுதியில் போட்டியிடச் சொல்கிறாரோ அங்கு நான் போட்டியிடுவேன்” என்று எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து தேமுதிக 14 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் 2-வது இடத்தைப் பிடித்திருந்தது. இந்நிலையில் மீண்டும் பாஜக- தேமுதிக கூட்டணிக்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது கவனிக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here