இன்று (ஜூலை 18) துவங்கும் மழைக்காலக் கூட்டத்தொடரில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக தன்னுடன் 12 கட்சிகளின் ஆதரவைப் பெற இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.

மழைக்காலக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி பல்வேறு முக்கிய விஷயங்களை விவாதிக்க இருக்கிறது. குறிப்பாகப் பெண்கள் பாதுகாப்பு, ஜம்மு காஷ்மீரில் ஆட்சியைத் தவறாகப் பயன்படுத்தியது, எஸ்சி, எஸ்டி சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் திருத்தம், விவசாயிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் முயற்சி, வாக்கு எந்திரங்களில் குளறுபடி, பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் அநியாய கொலைகள் , ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து போன்றவைப் பற்றி விவாதிக்க இருக்கிறோம் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, விதிமுறைகளையும், நெறிமுறைகளையும் புறந்தள்ளிவிட்டு, அரசின் நிறுவனங்களில் தங்களுக்கு தேவையானவர்களை நியமிக்கிறது, பெட்ரோல், டீசல் விலையையும் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இது குறித்து அவையில் கேள்வி எழுப்புவோம்.

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவில் இருந்து வருகிறது இது பற்றியும், பணமதிப்பு நீக்கம் காலத்தில் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் 5 நாட்களில் ரூ.750 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. இந்தக் கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர்களில் ஒருவராக பாஜக தலைவர் அமித் ஷா இருந்து வருகிறார். இது குறித்து விவாதிப்போம்” என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

நாங்கள் மக்கள் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்புவோம் ,பதிலளிப்பது அரசின் கடமை என்றும் கூறினார்.

சந்திரபாபு நாயுடுவின் தெலங்கு தேசம் கட்சியும், பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர கட்சிகளின் ஆதரவைப் பெற்று வருகிறது.

இதுதொடர்பாக, காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளின் ஆதரவைக் கோரி வருகிறது தெலங்கு தேசம் கட்சி. சென்னையில் திமுக எம்.பி. கனிமொழியைச் சந்தித்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு திமுக எம்.பி.க்கள் ஆதரவு தர வேண்டும் என தெலங்கு தேசம் எம்.பி.க்கள் குழு கோரிக்கை விடுத்துச் சென்றனர். முன்னதாக சிவசேனா கட்சியைச் சந்தித்து தெலங்கு தேசம் கட்சி ஆதரவு கோரியது.

Courtesy : First Post

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்