மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்யாவிட்டாலும் கூட, மாற்று அணி தாமாகவே உருவாகும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி இடம்பெற்றிருந்தது. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டிய அவரது கட்சி, கூட்டணியில் இருந்து விலகியது.

இந்நிலையில், அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவுக்கு மாற்றான அணியை உருவாக்கும் முயற்சிகளை தெலுங்கு தேசம் கட்சி முன்னெடுக்கும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

மோடி அரசு மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள் புதிய மாற்றத்தை தேர்வு செய்வார்கள். தேர்தலுக்கு முன்பாக, எதிர்க்கட்சி அணி சார்பில் பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்யப்படவில்லை எனில், பிரச்னை எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை. ஒரு பொறுப்புள்ள குடிமகனாக, நிச்சயமாக நான் எனது கடமையை செய்வேன். தேச நலனை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் நாங்கள் முக்கியப் பங்காற்றுவோம். கூட்டணி ஏற்படுத்துவது தொடர்பாக பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அண்மையில், கர்நாடக முதல்வர் குமாரசாமியை நான் சந்தித்தேன். இதேபோன்று பிற கட்சிகளுடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

ரஃபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து மக்களுக்கு அரசு பதில் சொல்ல வேண்டும். தற்போது மக்களுக்கு வங்கிகளின் மேல் இருந்து நம்பிக்கை போய்விட்டது. வங்கியில் கடன்வாங்கி விட்டு மோசடி செய்தவர்கள் நாட்டை விட்டு ஓடி விட்டார்கள் . மோடி அரசால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களை மிகவும் சிரமத்துக்கு உள்ளாக்கிவிட்டது.

தற்போது இருக்கும் பாஜக அரசால் எப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டின் நிலை மிக மோசமடைந்துள்ளது. மத்திய அரசு மக்களுக்கான கடமையை செய்யத் தவறிவிட்டது. இதனால் மக்கள் மாற்று சக்தியை தேர்வு செய்வார்கள் என்றார் அவர்.

Courtesy: Deccan Chronicle

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here