மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவை அழித்து விடுவோம் என்று சிவசேனை கட்சி மிரட்டியுள்ளது. கூட்டணி கட்சிகள் தேர்தலில் பாஜகவை எதிர்த்து போட்டியிட்டால், படுதோல்வியடைய செய்வோம் என்று அமித் ஷா எச்சரிக்கை விடுத்திருந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவசேனா இவ்வாறு கூறியுள்ளது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர அமைச்சருமான ராம்தாஸ் கடம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 5 மாநிலங்களில் பாஜக ஏற்கெனவே தோல்வியடைந்து விட்டது. இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் வந்து எங்களுக்கு மிரட்டல் விடுக்க வேண்டாம் என்று பாஜகவை கேட்டுக் கொள்கிறோம். அப்படி மிரட்டல் விடுத்தால், பாஜகவை சிவசேனா அழித்து விடும். மோடியின் அலை இல்லாமலேயே, சிவசேனா கட்சி 63 தொகுதிகளில் வென்றதை பாஜக மறக்கக் கூடாது.

பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே மராத்தியர், தாங்கர், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. அப்படியிருக்கையில், எப்படி ஒவ்வொருவருக்கும் இட ஒதுக்கீட்டை அவர்களால் அளிக்க முடியும்? தேர்தல்களை மனதில் கொண்டு, இந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் .

2019 மக்களவைத் தேர்தலில் , மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் தனித்து போட்டியிட போவதாகவும் சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பேசியபோது, கூட்டணி அமைத்து போட்டியிட்டால், கூட்டணி கட்சிகளின் வெற்றியையும் பாஜக உறுதி செய்யும்; இல்லையெனில் அக்கட்சிகளை படுதோல்வியடைய செய்வோம் என்று தெரிவித்திருந்தார். கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே, மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசியதாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here