குஜாரத் ராஷ்டிரிய தலித் அதிகார் மஞ்ச் அமைப்பின் தலைவர் ஜிக்னேஷ் மேவானியின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலுக்கு பாஜகவினர்தான் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனை பாரதிய ஜனதா கட்சி மறுத்துள்ளது.

மொத்தம் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் டிச.9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை டிச.18ஆம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில், ராஷ்டிரிய தலித் அதிகார் மஞ்ச் என்னும் அமைப்பின் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, பனஸ்கந்தா மாவட்டம் வத்கம் தொகுதியில் தனித்துப் போட்டியிடுகிறார். இவருக்கு காங்கிரஸ் கட்சி வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (நேற்று), பிரச்சாரத்திற்காக சென்றபோது ஜிக்னேஷ் மேவானியின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பனஸ்கந்தா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நீரஜ் பத்குஜார், “மேவானியின் வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் காயமேற்படவில்லை. மேவானி மற்றொரு காரில் இருந்தார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

இந்தச் சம்பவம் குறித்து ஜிக்னேஷ் மேவானி தனது டுவிட்டர் பக்கத்தில், தகர்வாடா கிராமம் அருகே பாஜகவினர் தன்னைத் தாக்கியதாகவும், இதற்காக தான் பயப்படப்போவதில்லை என்றும் பதிவிட்டுள்ளார். ஜிக்னேஷ் மேவானியின் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஜக்தீஷ் பவ்ஸர், பாஜகவுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.

நன்றி: News18.com

இதையும் படியுங்கள்: திருநங்கைகள்/திருநம்பிகள் சட்டத்தை ஏன் தடுத்து நிறுத்த வேண்டும்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்