மத்திய பாஜக அரசின் ஆட்சியின்கீழ் நிர்வாகம் சீரழிந்து காணப்படுவதாகக் காணப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற இந்தியா டுடே செய்தி நிறுவனத்தின் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் நாடளுமன்ற நடவடிக்கைகள் மதிக்கும்படியாக இருந்தன என்றும், தற்போதைய மோடி ஆட்சிக்காலத்தில் சட்டவிதிகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தலைமைப் பண்பு குறித்து பேசிய சோனியா காந்தி, “ஒவ்வொரு தலைவருக்கும் ஒவ்வொரு பண்பு இருக்கும். இளைஞர்கள், மூத்தத் தலைவர்களுக்கிடையே சமநிலையை ஏற்படுத்தி கட்சிக்கு புத்துணர்வை அளிப்பதில் ராகுல் ஆர்வமாகவுள்ளார்.” என்றார்.

மத்திய பாஜக அரசின் நடவடிக்கைக் குறித்து பேசிய சோனியா காந்தி, பாஜகவின் ஆட்சியின்கீழ் நிர்வாகம் சீரழிந்து காணப்படுவதாகக் குற்றம் சாட்டினார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் வெளிப்படைத் தன்மைக்காக காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்றும், ஆனால் இச்சட்டம் இன்று யாருக்கும் பயன்படுத்தப்படாமல், குளிர்சாதன அறையில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் பாஜக ஆட்சியில் கொல்லப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

முந்தைய பாஜக ஆட்சியில் சொல்லப்பட்ட இந்தியா ஒளிருகிறது என்ற கோஷம் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைக் கொடுத்ததுபோல், அச்சேதின் முழக்கமும் தங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்