மகாராஷ்டிராவில் பாஜக-வுடனான கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ள சிவசேனா தொடர்ந்து பல்வேறு காரணங்களைப் பட்டியலிட்டு பாஜகவை விமர்சித்து வருகிறது. இந்நிலையில் சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளிதழான ‘சாம்னா’-வில் பாஜக-வின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
தற்போது மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் அரசு அமைக்க சிவசேனா முடிவு செய்திருக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
நாடாளுமன்றத்தில் சிவசேனா எம்பிக்களுக்கான இருக்கைகளும் எதிர்க்கட்சி வரிசைக்கு மாற்றப்பட்டன. அதன் காரணமாக பாஜக, சிவசேனா இடையே விரிசல் அதிகமானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் பாஜகவை விளாசியிருக்கிறது சிவசேனா
பாஜக முதன் முதலில் தோன்றியபோது, ஒரு கட்சியும் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாக்கப்பட்ட போது, தற்போது மத்திய அரசில் பதவி வகிக்கும் பலருக்கு எந்தப் பொறுப்பும் ஒதுக்கப்படவில்லை. சிலர் பிறந்திருக்கவில்லை. பாஜக-வுடன் யாரும் இணைய மறுத்தபோது, நாங்கள் தேசிய ஜனநாயக் கூட்டணியோடு
கை கோர்த்தோம். இந்துத்துவா என்கிற வார்த்தை பலரால் வெறுக்கப்பட்ட போது, பாஜக-வுடன் நாங்கள் துணை நின்றோம். இப்போது அவர்கள் எங்களை முதுகில் குத்திவிட்டார்கள்
பாஜகவின் ஆணவ அரசியல் முடிய போகிறது என்பதற்கான ஆரம்பம் தான் இது. எங்களுக்கு சவால் விடுத்த உங்களை (பாஜக) ஒருநாள் அகற்றுவோம். தேசிய ஜனநாயக கூட்டணி உருவானபோது தலைவர்களாக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டசும், அத்வானியும் முக்கிய முடிவுகளை கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி எடுத்தனர்.
இப்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் யார்? மோடியை விமர்சித்த பிஜு ஜனதாதளம் பாஜகவுடன் இணைந்த போது யாரும் எங்களை கேட்கவில்லையே?
அனைவரும் பாஜகவை எதிர்த்த போது, சிவசேனா பாஜகவுக்கு ஆதரவாக நின்றது.ஆனால், பால் தாக்கரேவின் நினைவு தினத்தன்று கூட்டணியில் இருந்து தூக்கி எறியப்படுகிறோம். இது பல விளைவுகளை ஏற்படுத்தும் என்று கடுமையாக சிவசேனா எச்சரித்து இருக்கிறது.
சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி இறுதியாகும் நிலையில் இருக்கின்றது. இன்னும் ஒரு சில நாட்களில் அது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.