பாஜகவிடம் சமரசம் செய்த அய்யாக்கண்ணு ; வாரியத் தலைவர் பதவிக்காக மோடியை எதிர்த்து போட்டியிடவில்லையா ?

0
696

வாரியத் தலைவர் பதவி தருவதாக அமித்ஷா அளித்த ஒரு வாக்குறுதிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகுவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் பி.அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவராக இருந்து வரும் அய்யாக்கண்ணு, தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழகத்தில் ஆளும் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியையும், மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியையும் எதிர்த்து பல வினோதமான போராட்டங்கள் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தவர். 

இந்நிலையில் தங்கள் கோரிக்கையை மோடி அரசு  நிறைவேற்றவில்லை என்பதால்  பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக 17-வது மக்களவைத் தேர்தலில் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து 111 விவசாயிகள் போட்டியிட உள்ளதாக அதிரடியாக அறிவித்தார் அய்யாக்கண்ணு. இதற்காக அவர்கள் வாரணாசி செல்லவும் திட்டமிட்டிருந்தனர். இதன்மூலம் பிரதமர் மோடியின் விவசாய விரோத எண்ணங்களை நாடு முழுவதும் எடுத்துச் சொல்ல முடியும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார். 

வாரணாசியில் 111 விவசாயிகள் போட்டியிடும் பட்சத்தில் அங்கு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். அதுமட்டுமல்லாமல் விவசாயிகள் மோடிக்கு எதிராக களம் இறங்கியுள்ளனர் என்று உலகம் முழுவதும் விவாதப் பொருளாகி விடும். 

இதனால் அய்யாக்கண்ணுவை இதுநாள் வரை திரும்பிப் பார்க்காத பாஜக, திடீரெனத் திரும்பிப் பார்த்தது. அதாவது அவருக்கு கொடுக்க வேண்டிய வாக்குறுதிகளைக் கொடுப்பதாக கூறி அய்யாக்கண்ணுவை பாஜக தலைவர் அமித்ஷா டெல்லிக்கு அழைத்துள்ளார். அமித்ஷாவின் அழைப்பை ஏற்று டெல்லி சென்ற அய்யாக்கண்ணு, அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அமித்ஷாவுடனான சந்திப்பின் போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் உடனிருந்துள்ளனர். 

அமித்ஷாவுடனான சந்திப்பிக்கு பின் வெளியே வந்த அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில், அமித்ஷாவுடனான சந்திப்பு மன நிறைவை தருவதாகவும், பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுவதில் இருந்து விலகுவாக அதிரடியாக அறிவித்தார். 

அய்யாகண்ணுவின் அறிவிப்பு அவர் சார்ந்திருக்கும் விவசாய சங்கத்தினரிடேயை பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், இந்திய விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அதாவது, தனது நிலைப்பாட்டில் எப்போதும் உறுதியாக இருக்கும் அய்யாக்கண்ணு திடீரென மாறியதன் பின்னணியில் அமித் ஷா கொடுத்த அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதி என்னவாக இருக்கும் என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள் . 

இந்நிலையில், மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அய்யாக்கண்ணுக்கு ஒரு வாரியத் தலைவர் பதவி கொடுப்பதாக அமித்ஷா வாக்குறுதி கொடுத்துள்ளதாகவும், அதன் காரணமாகவே மோடிக்கு எதிரான போட்டியில் இருந்து அய்யாக்கண்ணு விலகியதாகவும் அவரது சங்கத்தினரே பேசி வருகிறார்கள் . 

இது குறித்து அய்யாக்கண்ணு பேசும்போது நதிகள் இணைப்பு குறித்து வாக்குறுதி அளிக்க ராகுல் காந்தி மறுத்துவிட்ட நிலையில், அமித் ஷாவை சந்தித்தபோது, நான் ஏற்கெனவே அனுப்பிய கோரிக்கை மனுவை காண்பித்து, இந்தக் கோரிக்கைகள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற உள்ளதாகக் கூறினார். அப்போது, தேர்தல் வாக்குறுதியில் எங்கள் கோரிக்கைகள் இடம் பெற்றால் வாராணசியில் போட்டியிட மாட்டோம் என தெரிவித்தேன். அதன்படி, பாஜக தேர்தல் அறிக்கையில் நாங்கள் முன்வைத்திருந்த ஆறு கோரிக்கைகளில் விவசாயிகள் கடன் தள்ளுபடி தவிர அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், வாராணசியில் போட்டியிடவில்லை என கூறியுள்ளார். 

வாரியத் தலைவர் பதவிக்காக மோடிக்கு எதிராக களம் இறங்குவதில் இருந்து அய்யாக்கண்ணு விலகிக்கொண்டதாக வைரலாகி வரும் செய்தி தமிழகம் மட்டுமின்றி இந்திய விவசாயிகள் மத்தியிலே பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

அய்யாக்கண்ணு பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி இதுதான் 

கேள்வி: அமித் ஷா மற்றும் உங்களிடையே நடந்த சந்திப்புக்கு முதல் முயற்சி எடுத்தது உங்கள் தரப்பா, பாஜக தரப்பா?

பதில்: மார்ச் 13 அன்று எங்கள் கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றி காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு அனுப்பி வைத்தோம்.

அதன்பின், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் எங்களைத் தொடர்புகொண்டு, அமித் ஷா உடன் சந்திக்க ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.

அமித் ஷா எங்களை ஏப்ரல் 7 அன்று எங்களை டெல்லிக்கு வரவழைத்து, எங்கள் சங்கத்தைச் சேர்ந்த ஒன்பது பேருடன் பேசினார். அப்போது தமிழக அமைச்சர் தங்கமணியும் உடன் இருந்தார்.

கேள்வி:நீங்கள் அமித் ஷாவிடம் முன்வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

பதில்:நதிகள் இணைப்பு, வேளாண் பொருட்களுக்கு லாபகரமான விலை, வேளாண் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளின் இறக்குமதிக்குத் தடை, விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளில் சிறு-குறு-நடுத்தர விவசாயிகள் என பாரபட்சம் காட்டாமல் அனைவருக்கும் வழங்குவது ஆகியவை எங்கள் ஆறு கோரிக்கைகள்.

கடன் தள்ளுபடி தவிர பிற ஐந்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்படும் என்று அமித் ஷா அப்போது தெரிவித்தார். அதை நம்பி மோதிக்கு எதிராக போட்டியிடும் முடிவைக் கைவிட்டோம்.

கேள்வி: உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற பாஜக ஒப்புக்கொண்டது எதனால் என்று கருதுகிறீர்கள்?

பதில்: நாங்கள் பிச்சை எடுத்து, நிர்வாணமாகச் சென்று வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்தால் அவர்களுக்கு அசிங்கம் என்றுதான் எங்களை அழைத்துப் பேசியுள்ளார்கள். நாங்கள் தேர்தலில் நின்று வெல்ல வாரணாசியில் போட்டியிட முடிவு செய்யவில்லை.

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவே அந்த முடிவைச் செய்தோம். அந்தக் கோரிக்கைகளை அவர்களே நிறைவேற்ற ஒப்புக்கொள்ளும்போது தேர்தலில் போட்டியிடும் தேவை இல்லாமல் போனது.

கேள்வி: பாஜகவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வந்த உங்களின் இந்த முடிவு குறித்த விமர்சனங்களுக்கு உங்கள் பதிலென்ன?

பதில்: நாங்கள் போராட்டம் நடத்தி வந்தபோது ‘ஆடி கார் அய்யாக்கண்ணு’, எனக்குப் பலகோடி சொத்து உள்ளது என்றெல்லாம் அவதூறு பேசினார்கள். இப்போது நான் பாஜகவிடம் பணம் வாங்கிவிட்டதாகவும், நான் எம்.பி பதவி பெறவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறுகிறார்கள். மிரட்டலுக்கு நான் பயந்து பின்வாங்குவதாகவும் சிலர் கூறுகிறார்கள்

மகாத்மா காந்தி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடியபோது இப்படித்தான் அவரையும் விமர்சித்தார்கள். இப்போது என்னையும் கேவலமாகப் பேசுகிறார்கள்.

நரம்பில்லாத நாக்கில் வரம்பில்லாமல் பேசலாமா? அவர்கள் எங்களுக்கு மரியாதை கொடுத்து அழைக்கும்போது, அதை மதித்துப் பேசுவதுதான் மனிதர்களுக்கு அழகு.

கேள்வி: ஒரு வேளை பாஜக தேர்தலில் வென்று, உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

பதில்: நாங்கள் ஏற்கனவே 141 நாட்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினோம். பாஜக எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் நாங்கள் மீண்டும் போராடுவோம்.

https://www.bbc.com/tamil/


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here