பாக்கெட் பானங்கள், உணவு பொருட்கள், இந்தியாவில்தான் மிக மோசம்- ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

0
200

பாக்கெட் உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள், உலக அளவில் இந்தியாவில்தான் மிக மோசமாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் தரம், சுகாதாரம் குறித்து ஆய்வு செய்யும் பணியில், ஜார்ஜ் உலக சுகாதார நிறுவனம் என்ற அமைப்பு ஈடுபட்டது. இதற்காக, இந்தியா உள்பட 12 நாடுகளில் இருந்து 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பாக்கெட் உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் மாதிரியை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது.

அவற்றில், சக்தி, உப்பு, சர்க்கரை, நிறை கொழுப்பு, புரதச்சத்து, கால்சியம், நார்ச்சத்து ஆகியவற்றை அளவீடு செய்தது. அதில் கண்டறியப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், ஒவ்வொரு நாட்டையும் தரவரிசைப்படுத்தியது. மிகக்குறைவான ஆரோக்கியம் என்றால், 0.5 என்ற தரவரிசை எண்ணும், அதிக ஆரோக்கியம் என்றால் 5 என்ற எண்ணும் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதில், இங்கிலாந்து 2.83 தரவரிசை எண் பெற்று முதலிடத்தை பிடித்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவை 2 மற்றும் 3-வது இடங்களை பிடித்தன.

ஆனால், இந்த பட்டியலில் வெறும் 2.27 எண் பெற்று இந்தியா கடைசி இடத்தை பிடித்தது. இந்தியாவில் உள்ள பாக்கெட் உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்களில் அதிகமான சர்க்கரை, நிறை கொழுப்பு, உப்பு, கலோரி ஆகியவை இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சீனா, சிலி ஆகியவை இந்தியாவுக்கு முந்தைய இடங்களில் உள்ளன.

இந்த ஆய்வு முடிவுகள், இந்தியா போன்ற நாடுகளுக்கு எச்சரிக்கை மணியாக அமையும் என்று ஜார்ஜ் உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய செயல் இயக்குனர் விவேகானந்த் ஜா தெரிவித்தார். உடல் பருமன் மற்றும் அதன் விளைவுகளை குறைக்கும் வகையில் உணவுப்பொருட்களை தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here