பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தைரியம் இருந்தால் கைப்பற்றுங்கள்: மத்திய அமைச்சருக்கு சவால்

0
243

 

 தைரியம் இருந்தால் எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைக் கைப்பற்றுங்கள் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு பீகார் எதிர்க்கட்சிகள் சவால் விடுத்துள்ளனர்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு அம்மாநிலமானது இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் செவ்வாயன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஜெய் காஷ்மீர், ஜெய் பாரத், நாம் இப்போது எல்லை தாண்டிச் செல்லலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

மத்திய அமைச்சரின் இந்தக் கருத்தை பீகார் மாநில எதிர்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான பிரேம்சந்த் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கிரிராஜ் சிங் இப்போதெல்லாம் மக்களை தவறாக வழிநடத்துவதற்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவருக்குத் தைரியம் இருந்தால் அவரை யார் தடுக்கப் போகிறார்கள்? மத்திய அரசும் எல்லை தாண்டிச் சென்று,      பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைக் கைப்பற்றுவது குறித்து ஒரு முடிவெடுக்க வேண்டும். கிரிராஜூம் தனது அமைச்சரவையில் கவனம் செலுத்தி புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதில் அக்கறை காட்ட வேண்டும்.  

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

இதேபோல் ராஷ்ட்ரிய ஜனதா தள சட்டப்பேரவை உறுப்பினர் விஜய் பிரகாஷ் கூறுகையில், ‘இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை பொதுவெளியில் பேசக் கூடாது. ஆனால் கிரிராஜ் சிங்கிற்கோ இது செய்தித்தாளில் இடம் பிடிப்பதற்கான விஷயம். அவர் ஏன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே பேசுகிறார்? ஏன் சீனாவைப் பற்றி பேசுவதில்லை? இது எல்லாமே அணி திரட்டும் அவரது அரசியலின் ஒரு பகுதியாகும்.’ என்று தெரிவித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here