ஹெட்டிங்லேவில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணியுடனான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 174 ரன்னுக்கு சுருண்டது.

ஹெடிங்லி மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. இங்கிலாந்து அணியில் காயம் அடைந்த ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்சுக்கு பதிலாக சாம் கரன் (19 வயது) அறிமுகமானார். ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராடு, கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் துல்லியமான வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் அணி தொடக்கத்திலேயே இங்கிலாந்து வீரர்களின் வேகப்பந்து வீச்சில் ஆட்டம் கண்டு அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது.

ஓரளவு தாக்குப்பிடித்த ஹரிஸ் சோகைல் 28, ஆசாத் ஷபிக் 27, கேப்டன் சர்பராஸ் அகமது 14 ரன்னில் ஆட்டமிழக்க, அந்த அணி 30.2 ஓவரில் 79 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்தது. முகமது ஆமிர் 13 ரன்னில் வெளியேறினார்.

ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய ஷதாப் கான் அரை சதம் அடித்தார். ஹசன் அலி 24 ரன் (16 பந்து, 5 பவுண்டரி), ஷதாப் கான் 56 ரன் (52 பந்து, 10 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்ப, பாகிஸ்தான் 48.1 ஓவரில் 174 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன், பிராடு, வோக்ஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினார். அறிமுக வேகம் சாம் கரன் தனது முதல் விக்கெட்டாக ஷதாப் கானை வெளியேற்றினார்.

அடுத்து முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கிய இங்கிலாந்து அணி 106 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்