காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உள்பட அனைத்து வகையான விளையாட்டுகளையும் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷம் எழுந்தது.

இதன் காரணமாக ஒரு சில சர்வதேச விளையாட்டுகளை இந்தியா நடத்த முடியாமல் போனது.

உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் மே 30 ஆம் தேதி முதல் ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதில் ஜூன் 16 ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஆட்டம் மான்செஸ்டரில் நடக்கிறது.

கவாஸ்கர், கபில்தேவ், டெண்டுல்கர் ஆகியோர் பாகிஸ்தானுடன் இந்தியா உலக கோப்பையில் ஆட வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். ஆடாமல் 2 புள்ளிகளை இழப்பதைவிட விளையாடி பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும் என்று டெண்டுல்கர் தெரிவித்தார்.

அதே நேரத்தில் பாகிஸ்தானுடன் இந்தியா உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட கூடாது என்று முன்னாள் வீரர்கள் கங்குலி, காம்பீர், ஹர்பஜன்சிங் உள்ளிட்ட வீரர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசின் முடிவின்படி செயல்படுவோம் என்று கூறி இருந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக ஐ.சி.சி.யின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியபோது :

ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து நாட்டு உறுப்பினர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்தியிட்டு உள்ளனர்.

2019 உலககோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அப்படி விளையாடமல் போவது விதிமுறைக்கு மாறானது. அப்படி அந்த விதிமுறைக்கு இணங்காத பட்சத்தில், ஒரு அணி மற்ற அணிகளுடன் விளையாடமல் போனால், அதற்கான புள்ளிகள் மற்ற அணிக்கே வழங்கப்படும்.

இந்திய வீரர்கள் சமீபத்தில் ராணுவ தொப்பி அணிந்து விளையாடியது பலியான வீரர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதாகும். புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர்களின் குடும்பத்துக்கு உதவுவது அவசியமானது.

நாங்கள் விளையாட்டுடன் அரசியலை கலக்க விரும்பவில்லை. இது ஐ.சி.சி.யின் தெளிவான குறிக்கோள் ஆகும். இந்தியா- பாகிஸ்தான் இடையேயான நேரடி போட்டித் தொடர் இருநாட்டு அரசுகள் மற்றும் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சம்மந்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here