பஸ்

Bus Fare Hike in Tamil Nadu

1
1068

“கண்டக்டர் அய்யா, சாதாரண பஸ்ஸில ரெண்டு மடங்கு காசு வாங்குறாங்க; என்னய்யா அநியாயம் இது?” என்கிறார் அந்தப் பெரியவர்.

“இருக்காது; அது எக்ஸ்பிரஸா இருக்கும்” என்கிறார் கண்டக்டர்.

பெரியவர் டிக்கெட்டை எடுத்து கண்டக்டரிடம் கொடுக்கிறார்.

எம்டிசி ஆர்டினரி; திருவொற்றியூர் டு சென்ட்ரல்; ரூ.12.00 என்று டிக்கெட்டில் இருக்கிறது.

“இது எட்டு ஸ்டேஜ் வருமே; பன்னிரண்டு ரூபா ஆகும்” என்கிறார் கண்டக்டர்.

”அய்யா, தெனமும் இதிலதான் வருவேன்; ஆறு ரூபாதான் டிக்கெட்; இன்னிக்குத்தான் பன்னிரண்டு ரூவா” என்றார் பெரியவர்.

இப்ப நாங்க பயணிப்பது 11ஜி சாதாரணப் பேருந்து; நேத்து வரை சிம்சனிலிருந்து பனகல் பார்க்கிற்கு ஐந்து ரூபா கட்டணம்; இன்று முதல் ஒன்பது ரூபா.

பஸ் முழுக்க பேரிரைச்சல்; ஒரு அம்மா ஓங்கிப் பேசிக் கொண்டிருந்தார்; “அரசியல்வாதியெல்லாம் கொள்ளையடிக்கிறான்; அதுக்கு எங்க வயித்தில அடிக்கிறான்” என்கிறார். பக்கத்திலிருந்த மாணவி சன்னமான குரலில் கேட்டாள். “எந்த அரசியல்வாதி?”

“மோடிலேர்ந்து எல்லா கேடியும் கொள்ளை அடிக்கிறான்; ப்ளேன்ல ஊர் ஊரா சுத்துறான்” என்றார் அந்த அம்மா.

என் பின்னாலிருந்த ஒருவர் எடுத்துக் கொடுத்தார்; “ஆமா, பிஜேபி வந்ததிலேர்ந்து நாட்டில நம்மப் போல சாதா சனத்துக்கு நிம்மதியே இல்லம்மா.”

”ஆமா. பைசா செல்லாதுன்னான்; ஏதோ சில்லறப் பொருளுக்கு வரின்னான்; அந்தச் சாமி சும்மா விடாது; நம்ம சனத்தைக் கொள்ளையடிக்கிறான்” என்றார் அந்த அம்மா.

எடப்பாடி எடுக்கிற முடிவு எப்படி மோடி தலையில விடியுதுன்னு நெனச்சேன்; மக்கள் சரியாத்தான் சொல்றாங்க; மக்கள் நல அரசு, மாநில உரிமைகள், மதச்சார்பின்மை எல்லாமே ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது. மாநிலத்தின் நிதி சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் அதிகாரம் குவிந்துகிடக்கிறது.

திருவான்மியூர் பஸ் நிலையத்திலிருந்து 47A (பச்சை போர்டு) தியாகராய நகர் வருவதற்கு வெள்ளிக்கிழமை வரை 13 ரூவா; சனிக்கிழமையிலேர்ந்து 23 ரூவா. ஒரு ஸ்டேஜுக்கு 7 ரூவா வாங்கின ஜிபிஎஸ் போர்டு போட்ட பஸ்ஸெல்லாம் 13 ரூவா கேக்குறாங்க.

நாகர்கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அரசு விரைவு பஸ்ல 526 ரூபா வாங்கினாங்க; இன்னிக்கு 820 ரூபா கேக்கிறாங்க.

பனகல் பார்க் நிறுத்தத்தில் தினமும் தலை நரைத்த அந்தப் பாட்டி தனது கைகளை கண்களுக்கு மேல் உயர்த்தி உன்னிப்பாக பார்ப்பார்; கண்ணைச் சுருக்கிப் பார்த்த பிறகும் தெரியவில்லையென்றால் சில நேரம் திரும்பி என்னிடம் “வெள்ளை போர்டுதானே” என்று கேட்பார். வெள்ளை போர்டுன்னா அடிப்படைக் கட்டணம் 3 ரூபாய்; வெள்ளை போர்டு 13ஆம் நம்பர் பஸ்ஸில் 6 ரூபாய்க்கு அண்ணா சதுக்கத்திலிருந்து தியாகராய நகர் வந்துவிடலாம்.

இப்ப வெள்ளை போர்டு பஸ்ஸில அஞ்சு ரூபா இல்லாம ஏற முடியாது.

அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள CLICK HERE பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

1 COMMENT

  1. இப்போதுவின் கட்டுரை அருமை
    மக்களோடு மக்களாக இப்போது பயணிக்கிறது
    மக்கள் பிரச்சனைகளை மக்களிடம் எடுத்துசெ (சொ)ல்வதில் இப்போதுவுக்கு நிகர் இப்போதுதான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here