அழகிய கடற்கரை,ஆங்காங்கே பறவைகள் என இயற்கை விரும்பிகளுக்கும் பறவை நோக்கர்களுக்கும் மிகப் பிடித்தமான இடம் பழவேற்காடு! சென்னையை அடுத்துள்ள பழவேற்காடு கழிமுகத்துவாரம், பல்வேறு உயிரினங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்துகொண்டிருக்கிறது. இந்தப் பல்லுயிர்ச்சூழலே வலசை வரும் பறவைகளை அதிகளவில் ஈர்த்துக்கொண்டிருக்கிறது. பழவேற்காடு பறவைகள் சரணாலயமும்கூட. பறவைகளின் வலசை ஆரம்பமாகியிருக்கும் நிலையில் கடந்த திங்கள்கிழமை பழவேற்காட்டிற்குப் பயணம் போனோம்.

மிக நீண்ட தொலைவிலிருந்து வலசை வரும் உள்ளான்களை ஏராளமாகப் பார்த்தோம். பூநாரைகள் இருந்தன. கார்த்திகை மாதம் வரை 600க்கும் அதிகமான பூநாரைகளை இங்கே காணலாம்.

ரியல் எஸ்டேட் வளர்ச்சியால் இன்று அழியும் தருவாயில் உள்ள நரிகளை பழவேற்காடில் காலைப் பொழுதுகளில் எப்போதும் பார்க்கலாம். இந்த முறை நாங்கள் நான்கைந்து நரிகளை ஒரே நேரத்தில் பார்த்தோம். மீனவர்கள் வலையில் இருந்து தூக்கி எறியும் கழிவுகளைத் தேடி இவை இங்கே வருகின்றன. பொதுவாக மறைந்து திரியும் இவை, சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டிருக்கின்றன. அதோடு அங்கிருக்கும் மீனவர்களால் இவைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உணர்ந்தே இவை சாதாரணமாக உலவுகின்றன என்பதும் ஆரோக்கியமான விஷயங்கள்.

பழவேற்காடின் பல்லுயிர்ச்சூழலுக்கு உள்ள ஒரே ஆபத்து அந்நியர்களால் வருகிறது. சேரும் நீரும் கலந்த சகதி போன்ற இந்த மண்ணில் உள்ள புழுக்களை எடுப்பதை சிலர் தொழிலாக செய்கின்றனர். இவர்கள் ஒருசிலரால் இந்தப் பணிக்கென்றே வேறு பகுதியில் இருந்து அழைத்து வரப்படுகின்றனர். அலங்கார மீன்களுக்கு உணவாக இந்த புழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் புழுக்களை சேகரித்து ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இவர்கள் தொழில் வளர்ந்துகொண்டிருக்கிறது. முன்பு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலும் இப்படியொரு சூழல் வந்தது. பிறகு கடுமையான கண்காணிப்பு செய்து, இதைத் தடுத்து நிறுத்தியது வனத்துறை.

collecting worms

சகதியில் இருக்கும் ஏராளமான இந்தப் புழுக்கள்தான் மீன்களின் உணவு. வலசை வரும் பறவைகளை ஈர்ப்பதும் இந்தப் புழுக்களே. இந்தப் புழுக்கள் குறையும் பட்சத்தில் பறவைகள் வருவது நின்றுபோகும். இங்கிருக்கும் மீனவர்களும் இதனால் மீன்வளம் குறைகிறது எனக் குற்றம்சாட்டுகிறார்கள். சூழலின் சமநிலையைக் கெடுக்கும் இதுபோன்ற செயல்களை வனத்துறை நடத்து நிறுத்த வேண்டும். எல்லாவற்றிலும் வணிக நோக்கம் பார்ப்பது, மனித குலத்துக்கு நல்லதல்ல!

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்